×

மழை வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் மின்சாதன பொருட்களை உடனே இயக்கினால் ஆபத்து: எலக்ட்ரீஷியன்கள் எச்சரிக்கை

சிறப்பு செய்தி
மழை வெள்ளத்தால் மூழ்கிய வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களை உடனே இயக்கினால் மின்சாரம் பாயும் என்றும், எனவே மின்சாதன பொருட்கள் நன்றாக உலர்ந்த பிறகு கவனத்துடன் கையாள வேண்டும் என்றும் எலக்ட்ரீஷியன்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக நந்தம்பாக்கம், முடிச்சூர், வரதராஜபுரம், மேற்கு மாம்பலம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், வண்டலூர், பெரும்பாக்கம், பெருங்குடி, கல்லுக்குட்டை, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, அம்பத்தூர், ஆவடி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் 3 அடி முதல் 8 அடி அளவுக்கு மழைநீர் தேங்கியது. அதேபோல் வடசென்னை பகுதிகளிலும் 3 அடி அளவுக்கு தண்ணீர் புகுந்தது.

வெள்ளம் புகுந்த பகுதிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. அதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 5 அடி முதல் 8 அடி வரை தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு மின்சார இணைப்பை தற்காலிகமாக துண்டித்துள்ளது. சென்னையில் 95 விழுக்காடுக்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அப்பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் 5 விழுக்காடு பகுதிகள் மிகவும் தாழ்வாக இருப்பதால் மின்சார இணைப்பு பெட்டி மற்றும் மின்மாற்றியை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மின் விநியோகம் வழங்கப்படாமல் உள்ளது. ஆனால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் பலர் கீழ் தளத்தில் மட்டும்தான் தண்ணீர் உள்ளது. மேல் தளங்களில் உள்ளவர்களுக்கு மட்டும் மின்சாரம் வழங்க வேண்டும் என்று பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக, தண்ணீர் வடிந்த ஒரு மணி நேரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு போர்க்கால அடிப்படையில் மின் இணைப்பு வழங்கி வருகிறது. சில இடங்களில் மின் இணைப்பு பெட்டி தாழ்வாக உள்ளதால் அதனை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது.

அப்படி தண்ணீர் தேங்கிய நிலையில் மின்சாரம் வழங்கினால் மின்சாரம், தண்ணீரில் பரவி சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மின்சாரம் பாய்ந்து இறக்கும் நிலை ஏற்படும். எனவே தான் அதுபோன்ற பகுதிகளில் மட்டும் தண்ணீர் வெளியேற்றி மின் இணைப்பு வழங்கும் பணியில் மின்சார வாரியம் முழு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

அதேநேரம், 3 முதல் 5 அடிக்கு மேல் தண்ணீர் புகுந்து வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் வீடுகளுக்கு மின்இணைப்பு கொடுக்கப்பட்டாலும், உடனே தனது வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களை யாரும் இயக்க வேண்டாம். முன்னெச்சரிக்கையாக தெருவில் உள்ள மின்இணைப்பு பெட்டியில் இருந்து வீடுகளில் உள்ள மின் பெட்டிக்கு மின்சாரம் வந்தாலும், அதை துண்டித்துவிட்டு, அருகில் உள்ள எலக்ட்ரீஷியன்களை அழைத்து வந்து, வீட்டில் உள்ள ‘கிரவுண்ட் எர்த்’ சரியாக உள்ளதா? அதேபோல், வீடுகளில் உள்ள ‘பிளக் பாயிண்ட்கள்’ அனைத்தையும் கழற்றி அதில் உள்ள தண்ணீரை வெளியேற்றி, சுத்தமாக துடைத்து நன்றாக உலர்த்த வேண்டும். பிறகு பிளக் பாயிண்டுகளில் உள்ள வயர்களில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்று கவனிக்க வேண்டும். தண்ணீர் இருந்தால் வெளியே எடுக்க வேண்டும்.

குறிப்பாக, நியூட்ரல் மற்றும் பேஸ் இரண்டு வயர்களை கவனமாக ஆய்வு செய்து பிறகு ‘பிளக் பாயிண்டுகளை’ வழக்கம் போல் பொருத்த வேண்டும். தண்ணீரில் மூழ்கிய பெரும்பாலான டிவி, ரேடியோ போன்ற எலக்ட்ரிக்கல் பொருட்கள் வெயிலில் உலர்த்தினாலும் திரும்ப பயன்படுத்த முடியாது. அதேநேரம், தண்ணீரில் மூழ்கிய மிக்சி, கிரைண்டர், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட சில பொருட்கள் மட்டும் நன்றாக வெயில் அல்லது மின்சாதனம் மூலம் உலர்த்தியும், மோட்டார்களில் உள்ள காயல்களில் உள்ள இணைப்புகளை சரி செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம். இது அனைத்தும் எலக்ட்ரீஷியன் உதவியுடன் தான் செய்ய வேண்டும்.

தண்ணீரில் மூழ்கிய வீடுகளில் உள்ள சுவர்களில் நீர் கசிவுகள் குறைந்தது ஒரு வாரத்திற்கு இருக்கும். அப்படி சுவர்களில் நீர் கசிவு இருந்தால் கண்டிப்பாக அந்த வீட்டில் மின்சாரத்தை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அதற்கு பதில் வீட்டின் முதன்மை மின்இணைப்பு பெட்டியில் இருந்து, தனியாக ‘எக்ஸ்டன்சன் பாக்ஸ்’ மூலம் மின்சாரம் இணைப்பு எடுத்து வீட்டிற்கு தேவையான லைட் மற்றும் மின்சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால் மட்டுமே மின்சார கசிவுகளில் இருந்து உயிர்களை பாதுகாக்க முடியும். இல்லையென்றால் வீடுகள் முழுவதும் மின்கசிவு மூலம் தீ விபத்து ஏற்பட்டு உயிர் சேதத்திற்கு வழிவகுத்துவிடும்.
எனவே, 3 அடிக்கு மேல் தண்ணீர் புகுந்த வீடுகளில் வசிப்போர் மின்சார விநியோகம் கொடுத்தாலும் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு எலக்ட்ரீஷியன்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மின் இணைப்புக்கு முன் செய்ய வேண்டியவை
* வீட்டில் உள்ள முதன்மை மின்இணைப்பு பெட்டியில் உள்ள மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்.
* தண்ணீரில் நனைந்த மின் விளக்குகள், மின்விசிறிகள், குளிர்சாதன பெட்டி போன்ற மின்சாதன பொருட்கள் அனைத்தும் மின்இணைப்பில் இருந்து உடனே வெளியே எடுக்க வேண்டும்.
* தண்ணீரில் நனைந்த நீர் ஏற்றும் மோட்டார், இன்வெர்ட்டர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும்.
* மின்வயர்கள் மற்றும் இணைப்பு பெட்டிகள் ஏதேனும் சேதம் அடைந்துள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
* முதன்மை மின் இணைப்பு பெட்டியில் இருந்து ‘கிரவுண்ட் எர்த்’ சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.

மின்சாரம் கொடுத்த பின் செய்ய வேண்டியது
* வீடுகளில் மின்சாரம் கொடுத்த பிறகு தண்ணீரில் நனைந்த மின்சாதன பொருட்களை கட்டாயம் பயன்படுத்த கூடாது.
* நீர்க்கசிவு மற்றும் மின்சார வயர்கள் செல்லும் சுவரின் அருகே யாரும் அமரவோ, சாய்ந்து உட்காரவோ கூடாது.
* மின்மோட்டார் இயங்கும் போது தொடக்கூடாது.
* வீட்டின் சுற்றுச்சுவரில் உள்ள அலங்கார மின் விளக்கு எரியும் போது, சுவரில் உள்ள இரும்பு கேட்டை தொடவோ அல்லது அதன் அருகே செல்வதையோ தவிர்க்க வேண்டும்.
* மின் சாதன பொருள் பயன்படுத்தும் போது, மின் இணைப்பு பெட்டியில் ஒரு முறைக்கு மேல் ‘பீஸ்’ போனால் மீண்டும் அதை கவனமாக கையாள வேண்டும்.

The post மழை வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் மின்சாதன பொருட்களை உடனே இயக்கினால் ஆபத்து: எலக்ட்ரீஷியன்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags :
× RELATED அண்ணா நகருக்கு திரும்புகிறது அரசு...