பள்ளிக்கரணையில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. பள்ளிக்கரணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 25 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்ததால் நாராயணபுரம் ஏரி மற்றும் கோவிலம்பாக்கம் ஏரி, குளங்கள் நிரம்பின. இதனால் நாராயணபுரம் ஏரி நீர், துரைப்பாக்கம் மற்றும் குரோம்பேட்டை நெடுஞ்சாலையில் 3 அடிக்கு மேல் சூழ்ந்துள்ளது.

காமாட்சி மருத்துவமனை சிக்னல், பாலாஜி பல் மருத்துவமனை முன்பு உள்ள சாலைகள் அனைத்தும் 5 அடிக்கு மேல் தண்ணீர் ஆறு போல் ஓடுகிறது. பள்ளிக்கரணையில் உள்ள பூர்வாங்கரா அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. ஒரு கட்டத்தில் பூர்வாங்கரா குடியிருப்பு முன்பு உள்ள சாலைகளில் நாராயணபுரம் ஏரியின் உபரிநீரானது ஒரே நேரத்தில் வெளியேறியதால், 5 அடிக்கு மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

இதில் சாலையோரம் குடியிருப்பு முன்பு நிறுத்தி வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள 30க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் ஒட்டுமொத்தமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் அந்த குடியிருப்பின் முதல் தளம் வரை தண்ணீர் சூழ்ந்து ஆறுபோல் ஓடியது.பாலாஜி பல்மருத்துவமனை அருகே மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பொதுமக்கள் கயிறு மற்றும் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர். பள்ளிக்கரணை மற்றும் சுற்றியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை உள்ளது. அவர்களை மீனவர் படகுகள் மூலம் மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

The post பள்ளிக்கரணையில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது appeared first on Dinakaran.

Related Stories: