ஆசிரியர்களிடையே வரவேற்பு

நாமக்கல், டிச.4: தமிழகத்தில் கனவு ஆசிரியர் விருது வழங்குவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அனைத்து நிலை ஆசிரியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக நேரடி நியமனம் பெற்ற, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கனவு ஆசிரியர் விருது வழங்குவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது அனைத்து நிலை ஆசிரியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நடப்பாண்டில் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நடைபெற்ற, தேர்வுகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள், பாடப்பொருள்கள் அறிவு, கற்பித்தல் உத்திகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன. மூன்று கட்ட தேர்வு முறைகளை தொடர்ந்து, 75சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற 380 ஆசிரியர்கள், கனவு ஆசிரியர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கனவு ஆசிரியர் விருது தேர்வில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும், நூற்றுக்கணக்கில் தேர்வு செய்யப்பட்டுள்ளது போல, வரும் கல்வி ஆண்டில் முதுகலை ஆசிரியர்களையும் அதே அளவில் தேர்ந்தெடுக்க, உரிய விகிதாச்சாரத்தை ஒதுக்கீடு செய்ய வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்களை மென்மேலும் ஊக்குவிக்கும் வகையில், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கனவு ஆசிரியர் விருதுக்கான தேர்வில், ஆயிரக்கணக்கான இளம் வயது ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். இது ஆசிரியர்களின் தொடர் கற்றல், கற்பித்தல் திறன்களை மென்மேலும் கூர்மைப் படுத்துவதற்கு பேருதவியாக இருக்கிறது.

மேலும் தற்போது கனவு ஆசிரியர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும், சென்னையில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட உள்ள சென்னை கலைவாணர் அரங்கிற்கு, வரும் ஜனவரி மாதத்தில் அழைத்து, அவர்களுக்கு உரிய மரியாதையுடன், விருதினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கி, ஆசிரியர்களை உற்சாகப்படுத்த வேண்டும். கனவு ஆசிரியர் விருது தேர்வை சிறப்பாக நடத்தி, விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதன்மை செயலாளர், இயக்குநர் ஆகியோருக்கு அனைத்து ஆசிரியர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஆசிரியர்களிடையே வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: