×

பொதுமக்களை விரைந்து காப்பாற்ற நடவடிக்கை: தயார் நிலையில் 5 ஆயிரம் மணல் மூட்டைகள் : பள்ளிகளுக்கு விடுமுறைகளை கலெக்டர் அறிவிக்க வேண்டும்

வேதாரண்யம்,டிச.3: பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறைகளை கலெக்டர் அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி, பள்ளிக்கூடங்களுக்கு சூழ்நிலைக்கேற்ப அரசு விடுமுறை அளித்து வருகிறது. தற்போது பள்ளி தலைமை ஆசிரியர்களே, விடுமுறையை முடிவு செய்து அறிவிக்கலாம் என்ற செய்தி குழப்பத்தை, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மழைக் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவசரகால விடுமுறை விடப்படுவது வழக்கமானதாகும். மாணவர்கள் மழையில் நனையக்கூடாது, நோய்வாய்ப்படக்கூடாது, அதனால் விடுப்பு எடுக்க கூடாது, அவர்களது புத்தகங்கள் நனைந்துவிடக்கூடாது, நீர் நிலைகளை கடந்து வரும் பிள்ளைகளுக்கு ஆபத்து நேர்ந்து விடக்கூடாது ஆகியவை இதற்கான காரணங்களாகும். மேலும் குறுகிய சாலைகள், நீர் நிலைகள் உள்ள கிராமங்களில், பள்ளி வாகனங்கள் செல்வது ஆபத்தானது என்பதும் இதன் இன்னொரு முக்கிய காரணமாகும். தற்போது உள்ள தகவல் தொடர்பு வசதியில் தொலைக்காட்சி வழியாக கலெக்டர் விடுப்பு அறிவிக்கும் போதுதான் மாவட்டம் முழுவதும் செய்தி சென்றடைகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பம் இன்றி முடிவெடுக்க முடியும்.

சூழலுக்கு ஏற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்ற கலெக்டரின் புதிய அறிவிப்பு என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. பள்ளி தலைமை ஆசிரியரால் பள்ளி விடுமுறை என்ற தகவலை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க முடியாத நிலை உள்ளது. காலையில் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு விடுப்பு விட நினைத்தாலும், மாணவர்களுக்கு அந்த தகவல் சென்று சேர வாய்ப்பு குறைவு. மாணவர்கள், மாணவிகள் பள்ளிக்கூடம் வந்த பிறகு, அங்கு விடுமுறையை தெரிந்து, அதன் பிறகு வீடு திரும்புவது என்பது நல்லதல்ல.

மேலும் பள்ளிக்கூட வகுப்புகளும், தேர்ச்சி விகித வளர்ச்சியும் மட்டுமே நோக்கமாக கருதும் தலைமையாசிரியர்கள் விடுமுறை வழங்க தயங்கும் நிலையும் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் மழை பெய்த போது, ஒரே ஊரில் உள்ள சில பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை , சில பள்ளிக்கூடங்களுக்கு வகுப்புகள் உண்டு என்ற நிலை ஏற்பட்டு குழப்பங்கள் உருவாகி உள்ளது. இது அரசுக்கும் கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் புரிந்துக் கொள்ளப்படுகிறது.

இந்த குழப்பமான நடைமுறையினால் விடுமுறை அளிக்கும் நோக்கமே பாதிக்கப்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் மழைக்காக விடப்படும் விடுமுறைகளை மாவட்ட கலெக்டரே அறிவிக்க வேண்டும். மேலும் மழையின் தீவிரத்தை கணித்து, முதல் நாள் இரவு 11.30க்குள் அறிவிப்பு வெளியிடுவது பயனுள்ளதாக இருக்கும். இதே அளவுக்கு மழை தீவிரமாக இருக்கும் பக்கத்து மாவட்டங்களில் மழை விடுமுறை அறிவிப்பு என்பது முன்கூட்டியே வெளியிடுகிறது. எனவே யதார்த்தங்களை புரிந்துக்கொண்டு இக்கோரிக்கைகளை கலெக்டர் பரிசீலிக்க வேண்டும். என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொதுமக்களை விரைந்து காப்பாற்ற நடவடிக்கை: தயார் நிலையில் 5 ஆயிரம் மணல் மூட்டைகள் : பள்ளிகளுக்கு விடுமுறைகளை கலெக்டர் அறிவிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Northeast Monsoon ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...