நாகர்கோவில், டிச.3 : நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாமினை கலெக்டர் ஸ்ரீதர் நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கட்டணமில்லா சேவையினை ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டு திட்டத்தினை கடந்த 23.07.2009 அன்று துவங்கி வைத்தார்.
ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகியவற்றினை 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படுத்தும். இதற்கான ஆணையை பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின்படி காப்பீட்டுத் திட்ட பயனாளி குடும்பத்திற்கு ஓராண்டிற்கு ரூ.5 லட்சம் வரை அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எவ்வித கட்டணமுமின்றி சிகிச்சை பெறலாம்.
அதனடிப்படையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நூறு சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில் குமரி மாவட்டத்தில் நான்கு சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் தம்மத்துக்கோணம் அரசு நடுநிலைப்பள்ளி, மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவிதாங்கோடு திருவாய் மெடி சென்டரிலும், மலையடி அரசு தொடக்கப்பள்ளியிலும் நடைபெற்று வருகிறது. முகாம்களில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 32 விண்ணப்பங்களும், தோவாளையில் 36, கல்குளம் 15, விளவங்கோடு 35 விண்ணப்பங்கள் என இதுவரை மொத்தம் 108 விண்ணப்பங்கள் இணைய வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு சேர்க்கை முகாமில் இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் பதிவு செய்யாத பயனாளிகள் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் வந்து பதிவு செய்து கொண்டு பயனடையலாம். இந்த முகாமில் பதிவு செய்ய தவறியவர்கள் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பதிவு மையத்திற்கு வந்து பதிவு செய்து கொள்ளலாம். ஆய்வில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பிரகலாதன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மீனாட்சி, மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு சிறப்பு முகாம்: கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.
