×

சிறுமுகை அருகே குட்டையில் பதுங்கிய முதலைக்காக வலை விரித்து காத்திருக்கும் வனத்துறையினர்

 

மேட்டுப்பாளையம்,டிச.3: மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை சென்னம்பாளையம் பகுதியில் சுரேஷ்(46) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.வழக்கம் போல நேற்று முன்தினம் காலை விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது,கிணற்றின் அருகே இருந்த மோட்டாரை இயக்க முற்பட்ட போது கிணற்றில் சுமார் 7 அடி நீளத்திற்கு முதலை ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து அவர் சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமாருக்கு தகவல் அளித்துள்ளார்.

விரைந்து வந்த சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் முதலையை பிடிக்க முற்பட்ட போது அவர்களிடம் இருந்து தப்பிய முதலை அருகில் உள்ள குட்டையில் சென்று தப்பியுள்ளது. இதனையடுத்து அந்த குட்டையை சுற்றிலும் வலைகளை கட்டி சிறுமுகை வனத்துறையினர் காத்துள்ளனர். குட்டையில் முதலை இருப்பதால் அப்பகுதி மக்கள் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.தொடர்ந்து 2 வது நாளாக முதலையை பிடிக்கும் பணியில் வலை விரித்து வனத்துறையினர் காத்துள்ளனர். இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமார் கூறுகையில்:

சமீபத்தில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் தப்பிய முதலை கிணற்றிற்குள் வந்திருக்கலாம்.அதை பிடிக்க முற்பட்ட போது கிணற்றின் அருகே இருந்த குட்டையில் சென்று தப்பியது. குட்டையை சுற்றிலும் முட்புதர்கள் நிறைந்துள்ள நிலையில் அதனை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் முட்பதர்களை சீரமைத்து கொடுத்தால் முதலையை பிடிக்க ஏதுவாக இருக்கும். தற்போது அந்த குட்டையை சுற்றிலும் வலை அமைக்கப்பட்டுள்ளது. வலையில் முதலை சிக்கினால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் முதலையை பத்திரமாக பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

The post சிறுமுகை அருகே குட்டையில் பதுங்கிய முதலைக்காக வலை விரித்து காத்திருக்கும் வனத்துறையினர் appeared first on Dinakaran.

Tags : SHIRUMUGAI CHENNAMPALAYAM ,METUPALAYAM ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது