மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்தில் அடங்கிய தேவத்தூர் ஊராட்சியில் சுமார் 40 ஆண்டு பழமையான கட்டிடத்தில் ஏற்கெனவே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இங்கு 26 குழந்தைகள் படித்து வந்தனர். இக்கட்டிடத்தில் மழைக்காலத்தின்போது ஆங்காங்கே கட்டிட விரிசல்கள் மூலம் மழைநீர் உள்ளே புகுந்தது. இதனால் அங்கு குழந்தைகளுக்கு சமைப்பதற்காக வைத்திருந்த உணவு பொருட்கள் சேதமாகின. இதனால் இக்கட்டிடத்தை இடித்துவிட்டு, அங்கு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை கட்டி தரவேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இக்கோரிக்கையை ஏற்று, அங்கு ஊரக வளர்ச்சித் துறை சார்பில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
இம்மையத்தில் குழந்தைகளைக் கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், தேவத்தூர் ஊராட்சியில் நேற்று மாலை புதிய அங்கன்வாடி மைய திறப்பு விழா ஊராட்சி மன்றத் தலைவர் குமார் தலைமையில் நடந்தது. புதிய அங்கன்வாடி மையத்தை அங்கு படிக்கும் குழந்தைகளே திறந்துவைத்தனர். அவர்களை பெற்றோரும் பொதுமக்களும் கைதட்டி உற்சாகப்படுத்தினர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் குமார் இனிப்பு வழங்கினார். இதில் துணைத் தலைவர் கலைசெல்வி ஆறுமுகம், உறுப்பினர்கள் கருணாகரன், கம்சலா, பானுமதி, குமார், சரத்குமார், அங்கன்வாடி ஆசிரியை தமிழ்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தேவத்தூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையத்தை குழந்தைகள் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.