×

கிளாம்பாக்கம் நவீன பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்கி இன்று ஒத்திகை? போக்குவரத்து துறை, சிஎம்டிஏ நிர்வாகம் தகவல்

கூடுவாஞ்சேரி, டிச.2: கிளாம்பாக்கத்தில் ₹394 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, நவீன பேருந்து நிலையம் திறப்பதற்கு முன்பு இன்றும், நாளையும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளும், மினி ஆம்னி பேருந்துகளும், மாநகர புறநகர் பேருந்துகளும் வெள்ளோட்டம் நடத்த திட்டிமிட்டுள்ளதாக போக்குவரத்து துறை மற்றும் சிஎம்டிஏ நிர்வாகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காகவும், தென் மாவட்டங்களுக்கு சென்று வரும் பயணிகளின் வசதிகளுக்காகவும், சென்னை, வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் 110 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பில், 86 ஏக்கரில் ₹394 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றும், நாளையும் பேருந்துகளை இயக்கி ஒத்திகை பார்க்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை மற்றும் சிஎம்டிஏ நிர்வாகத்தினரிடம் கேட்டதற்கு, வண்டலுர் அடுத்துள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் கட்டடம் கட்டும் பணி நிறைவு பெற்று விரைவில் திறக்கும் நிலையில் உள்ளது. இந்த பேருந்து நிலையம் பலமுறை திறப்பதற்கான தேதிகளை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டும் திறக்க முடியாமல் போனது. இன்னும் சில வாரங்களில் ஒரு சில பணிகள் முடிந்து விடும். மேலும், இந்த மாத இறுதிக்குள் பேருந்து நிலையத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அவ்வப்போது ஆய்வு செய்த அமைச்சர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர்.

இதன் வெள்ளோட்டமாக 25 அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளும், 25 மினி ஆம்னி பேருந்துகளும், 25 மாநகர புறநகர் பேருந்துகளும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து சென்று வெள்ளோட்டம் பார்க்கும் நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடத்தப்பட்டு, போக்குவரத்துகள் எப்படி உள்ளது. எந்த மாதிரியான பிரசனைகள் உள்ளது.மேலும், செய்யப்பட வேண்டிய பணிகள் என்ன? போன்றவை குறித்து அதிகாரிகளுடன் ஒத்திகை நடைபெற இருப்பதாக தெரிவித்தனர். இதில், அதிகாரிகள் கூறியபடி வெள்ளோட்டம் நிகழ்ச்சி இன்றும். நாளையும் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது இதுவும், தள்ளி போகுமா என்பது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் கேள்விக்குறியாக உள்ளது.

The post கிளாம்பாக்கம் நவீன பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்கி இன்று ஒத்திகை? போக்குவரத்து துறை, சிஎம்டிஏ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Clambakkam Modern Bus Station ,Department of Transport ,CMDA Administration ,Kuduvanchery ,Klambakkum ,Transport Department ,CMDA Administration Information ,Dinakaran ,
× RELATED பதிவுச்சான்று, ஓட்டுநர் உரிமம்...