×

பாஜவை பதவி நீக்கம் செய்வது நமது பொறுப்பு; மாநில, கல்வி உரிமையை மீட்க நாம் இணைந்து பாடுபடுவோம்: கேரளா விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘மாநில மொழிகள், இலக்கிய வளம், கல்வி உரிமை ஆகியவற்றை பாதுகாக்க தமிழ்நாடு மற்றும் கேரள மக்கள் இணைந்து பாடுபடுவோம்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேரளாவில் நடந்த விழாவில் பேசினார். கேரள மாநிலம் கண்ணூரில் மாணவர்களின் ஒருங்கிணைப்பில், கண்ணூர் பல்கலைக்கழக இலக்கிய திருவிழா 2023ன் நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது.

இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:
பாசிசவாதிகள் திரிக்கப்பட்ட பொய்யான செய்திகளை பரப்புவதால், எனது உரையில் சொற்களை தேர்ந்தெடுப்பதில் நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொய்யான செய்திகளை எதிர்த்து போராடுவது நமது முக்கியமான பொறுப்பு. சமீபத்தில், ஒரு மாநாட்டில், சாதி பாகுபாடு இல்லாமல் சமமான சமூகத்தை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து பேசினேன். மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக எனது அறிக்கையை பாஜ தவறாக திரித்து பொய்யாக பரப்பியது. அந்தநேரத்தில் எனக்கு ஆதரவாக நின்ற கேரள மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

நாங்கள் இந்திக்கோ, எந்த மொழிக்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால், கட்டாயப்படுத்தி படிக்க வேண்டும் என்று சொல்கிறபோது, அந்த பாசிச மனநிலையைத்தான் இன்றைக்கும் எதிர்க்கிறோம். அடிப்படைவாத சக்திகளை எதிர்த்து போராடுவதில், தமிழ்நாட்டை போலவே கேரளாவும் நாட்டின் பிற பகுதிகளுக்கு முற்போக்கான பாதையை காட்டியது. இதைபற்றி சிந்திப்பது தமிழ்நாட்டின் முற்போக்கான முகத்தின் வேர்களை மீண்டும் கண்டுபிடிக்க என்னை தூண்டுகிறது. நாடு முழுவதும் உள்ள தனது அரசியல் எதிரிகளை வேட்டையாட ஒன்றிய அரசு சுயாதீன புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துகிறது. பாஜ அல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களின் நிர்வாகத்தை சீர்குலைக்க ஒன்றிய அரசு ஆளுநர்களை அனுப்புகிறது. தமிழக ஆளுநரின் செயல்பாடு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு இடையூறாக மற்றொரு மூர்க்கத்தனமான பிற்போக்குத்தனமான நடவடிக்கையை எடுத்துள்ளது.

நம் நாட்டின் மாநில மொழிகளை பாதுகாக்க இலக்கிய வளத்தை பாதுகாக்க – மாநில உரிமை – கல்வி உரிமை ஆகியவற்றை காக்க தமிழ்நாடு மற்றும் கேரள மக்கள் இணைந்து பாடுபடுவோம். ஒட்டுமொத்த இந்தியாவிலும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாஜ முழுமையான தோல்வியை சந்தித்தது. இந்த 2 மாநிலங்களிலும் அவர்களால் ஒரு இடத்தை கூட பெற முடியவில்லை. நமது மக்கள் எவ்வாறு முற்போக்கானவர்கள் மற்றும் இந்த பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிரானவர்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும். 2024 மக்களவை தேர்தல் நெருங்கிவிட்டது. நமது இந்திய ஒன்றியத்தையும் நமது மாநிலங்களையும் காப்பாற்ற பாசிசவாத பாஜவை பதவி நீக்கம் செய்வது நமது பொறுப்பு. இவ்வாறு அவர் பேசினார்.

The post பாஜவை பதவி நீக்கம் செய்வது நமது பொறுப்பு; மாநில, கல்வி உரிமையை மீட்க நாம் இணைந்து பாடுபடுவோம்: கேரளா விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BAJA ,MINISTER ,STALIN ,KERALA ,Chennai ,Tamil Nadu ,BJP ,Minister Assistant Secretary ,
× RELATED ஒடுக்கப்பட்ட மக்களின்...