×

அனுமதியின்றி செல்போனில் இருந்த மனைவியின் அந்தரங்க படங்களை திருடிய கணவன்: விவாகரத்து வழங்கி நீதிமன்றம் அதிரடி

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்ற தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவி உறங்கிக் கொண்டிருந்த போது அவரது செல்போனை கணவன் அனுமதியின்றி எடுத்துள்ளார். அதில் கூகுள் டிரைவில் மனைவி அழிக்காமல் வைத்திருந்த பழைய புகைப்படங்கள் சிலவற்றை பார்த்த கணவன், அவற்றை எடுத்து வைத்துக்கொண்டு அவரைத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். மேலும் அந்தப் புகைப்படங்களை தனது குடும்பத்தினரிடம் காட்டி மனைவியை அவமானப்படுத்தியதோடு, சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும் அச்சுறுத்தி வந்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த மனைவி விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். அங்கு அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனுவானது ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுஜித் நாராயண் பிரசாத் மற்றும் அருண் குமார் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘கணவன் தனது மனைவியின் அனுமதியின்றி செல்போனை எடுத்து புகைப்படங்களை திருடுவது மற்றும் அதை வைத்து மிரட்டுவது அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலாகும். இதுவும் ஒருவகையான மனரீதியான கொடுமையே’ என்று கருத்து தெரிவித்தனர். ஒவ்வொரு வழக்கின் தன்மையை பொறுத்தே கொடுமையின் அளவை தீர்மானிக்க முடியும் என்று கூறிய நீதிபதிகள், கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து அந்தப் பெண்ணிற்கு இந்து திருமணச் சட்டத்தின் கீழ் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தனர்.

Tags : Ranchi ,Dhanbad, Jharkhand ,
× RELATED சிறார் காதல் ஜோடிகளை பாதுகாக்க வேண்டி...