நெற்பயிரை தாக்கும் இலைச்சுருட்டுப்புழு இணை இயக்குநர் ஆலோசனை

 

சிவகங்கை, நவ.29: நெல்பயிரில் இலைச்சுருட்டுப்புழு தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 1,70,000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் பயிர்கள் 30 முதல் 50 நாள் வயதுள்ள பயிராக உள்ளது. தற்போது நிலவி வரும் பகல் நேர குறைந்த வெப்ப நிலை மற்றும் மேகமூட்டத்துடன் குளிர்ந்த கால நிலை காரணமாக பயிர்களில் இலைச்சுருட்டுப் புழுவின் தாக்குதல் வரவாய்ப்புள்ளது.

இலைச்சுருட்டுப்புழு தாக்குதல் ஏற்பட்டால் இலைகள் நீள் வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். பச்சை நிறத்தில் புழுக்கள் அதனுள்ளே இருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்து விடும். தீவிர தாக்குதலின் போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.

இத்தாக்குதலை தடுக்க வயல்வெளியில் உள்ள வரப்பு ஓரங்களை சுத்தமாக களைச் செடியின்றி வைக்க வேண்டும். தழைசத்து உரத்தை அதிகமாக ஒரே நேரத்தில் வயலில் இடாமல் தேவையான நேரத்தில் மூன்று முறை பிரித்து இடவேண்டும். இரவு நேரங்களில் வயல் வெளியில் விளக்குப் பொறி அமைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். மேலும் மருந்துகள் தெளித்து பூச்சிகளை அழிக்கும் முறைகளை சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் அலுவலகங்களை அணுகி ஆலோசனை பெற்று செய்யலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நெற்பயிரை தாக்கும் இலைச்சுருட்டுப்புழு இணை இயக்குநர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: