ஆந்திராவில் 75 கி.மீ., தமிழகத்தில் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வட்டங்களில் ரூ.3,197 கோடி மதிப்பில் 51 கி.மீ., தூரம் என்எச் 716 பி என்ற தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. இச்சாலைக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 889 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட சானாகுப்பம் முதல் புண்ணியம் வரை சித்தூர் – தச்சூர் 6 வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்த முதலில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதைய திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து உடன்பாடு ஏற்பட்டது.
ஆனால், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி நீதிமன்றத்திற்கு சென்றனர். இதற்கு புண்ணியம் பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது விவசாய நிலத்தில் பள்ளங்கள் தோண்டினர்.
இந்நிலையில் நேற்று திருத்தணி வருவாய் கோட்ட அலுவலர் தீபா தலைமையில் பள்ளிப்பட்டு விவசாயிகளுக்கும், நெடுஞ்சாலைத் துறையினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காததால் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்தனர். ஆந்திர மாநிலத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு முழுவதும் வழங்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் பாரபட்சம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
The post நில இழப்பீடு வழங்கும் விவகாரம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு appeared first on Dinakaran.
