சட்ட விதிகளை உருவாக்க காலக்கெடு நிர்ணயம்: சிஏஏ சட்டத்தை கட்டாயம் அமல்படுத்துவோம்.! ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் பேச்சு

கொல்கத்தா: நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை கட்டாயம் அமல்படுத்துவோம் என்று ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனி கூறினார். மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பரகானாஸில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனி பேசுகையில், ‘குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு செய்தன. உச்ச நீதிமன்றத்தில் எதிர்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து சட்ட போராட்டங்களையும் ஒன்றிய அரசு செய்யும். எங்களது வாக்குறுதியின்படி குடியுரிமை சட்டத்தை கட்டாயம் அமல்படுத்துவோம். முன்னதாக கடந்த 2019 டிசம்பர் 9ம் தேதி மக்களவையில் சிஏஏ மசோதா நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் அதே ஆண்டு டிசம்பர் 11ம் தேதி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அதே ஆண்டு டிசம்பர் 12ம் தேதி இந்த மசோதா சட்டமாக்கப்பட்டது. தொடர்ந்து 2020 ஜனவரி 10ம் சிஏஏ சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால் சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை உருவாக்க மக்களவையின் சட்டமன்றக் குழு, அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.

அதேபோல் ராஜ்யசபா குழுவும் அடுத்தாண்டு மார்ச் 30ம் தேதி வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அதன்படி சிஏஏ விதிகள் அடுத்தாண்டு மார்ச் 30ம் தேதிக்குள் உருவாக்கப்படும்’ என்றார். ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்து, சீக்கியர், புத்த, ஜெயின், பார்சி, கிறிஸ்தவ மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதே, இந்த சட்டத்தின் நோக்கமாகும்.

The post சட்ட விதிகளை உருவாக்க காலக்கெடு நிர்ணயம்: சிஏஏ சட்டத்தை கட்டாயம் அமல்படுத்துவோம்.! ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: