பட்டிவீரன்பட்டி பகுதியில் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

பட்டிவீரன்பட்டி, நவ. 26: பட்டிவீரன்பட்டி பகுதியில் தொடர் மழை காரணமாக மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தையன்கோட்டை, சிங்காரக்கோட்டை, தேவரப்பன்பட்டி, நரசிங்கபுரம், ஒட்டுப்பட்டி, சித்தரேவு, நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 1000 ஏக்கருக்கு மேல் மானாவாரி நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் மழை பெய்யும் காலங்களில் நிலக்கடலை, சோளம், மொச்சை, தட்டாப்பயிறு, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் சாகுபடி செய்வது வழக்கமாகும்.

பட்டிவீரன்பட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததுடன், ஆழ்குழாய் மற்றும் கிணறுகளில் தண்ணீர் தேக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து விவசாயிகள் தொடர் மழையால் மானாவாரி நிலங்களில் அதிகளவில் மக்காச்சோளங்களை விதைத்துள்ளனர்.

இதுகுறித்து மக்காச்சோள விவசாயிகள் கூறியதாவது:மக்காச்சோளம் சிறுதானிய வகைகளில் முக்கிய பங்கு வகிப்பதாலும், பலவகையான உணவு வகைகள் மற்றும் பாப்கான் செய்ய பயன்படுவதாலும் இதன் தேவை அதிகரித்து வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு ஓரளவிற்கு லாபம் கிடைக்கிறது. இந்த பயிர்கள் 120 நாட்களில் விளையும். விவசாய நிலங்களில் விளையும் பருவத்தில் காட்டுப்பன்றிகள் அதிகளவில் வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

The post பட்டிவீரன்பட்டி பகுதியில் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: