187 மாணவ, மாணவிகளுக்கு ரூ.14.55 கோடி கல்விக்கடன் வெங்கடேசன் எம்பி பங்கேற்பு

 

மதுரை, நவ. 25: மதுரை மாவட்ட நிர்வாகம், அனைத்து வங்கிகள் மற்றும் டோக் பெருமாட்டி கல்லூரியின் ரோட்டரக்ட் சங்கம் இணைந்து மாவட்ட அளவிலான கல்விக்கடன் வழங்கும் முகாமை நேற்று நடத்தியது. இதில் 16 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 187 மாணவ, மாணவிகளுக்கு ரூ.14 கோடியே 55 லட்சம் கல்விக் கடன் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் டோக் பெருமாட்டி கல்லூரி துணை முதல்வர் பியூலா ஜெய வரவேற்றார். மதுரை எம்பி சு.வெங்கடேசன் பேசும்போது, ‘‘நாடாளுமன்றத்தில் கல்வி நிலை குழு உறுப்பினராக இருப்பதால், மதுரை மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக கல்வி திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். இந்தியாவிலேயே முதல்முறையாக போட்டித் தேர்வுக்கான படிப்பு வளாக பூங்கா ஏற்படுத்தியது மதுரையில் தான். கடந்த 2021 முதல் ஆண்டுதோறும் கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம், மதுரையில் நடந்து வருகிறது.

வட்டிக்கு கடன் வாங்கி கல்வி பயிலும் நிலையை தடுக்கவே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவம், பொறியியல், வேளாண்மை, பல் மருத்துவம் போன்ற படிப்புகளை முடிக்கும்வரை இந்த கடனுக்கு வட்டி கிடையாது. அதனை மானியமாக ஒன்றிய அரசு கொடுக்கிறது. எனவே மாணவ, மாணவிகள் இத்திட்டத்தை பயன்படுத்தி வாழ்க்கையை முன்னேற்றிட வேண்டும்’’ என்றார். தொடர்ந்து மாணவ மாணவிகளிடம் கடன் தொகைக்கான காசோலைகளை அவர் வழங்கினார்.

The post 187 மாணவ, மாணவிகளுக்கு ரூ.14.55 கோடி கல்விக்கடன் வெங்கடேசன் எம்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: