நன்றி குங்குமம் டாக்டர்
தாவரங்கள் இயற்கையின் ஒப்பற்ற கொடைகளாகும். இவைகளின் தன்மைகள், குணங்கள் தன்னிகரற்றது. இவற்றை முறைப்படி பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வைப் பெறலாம். தாவரங்களின் மணம், சுவை கூட ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறது. தாவரங்களின் சுவை உணவை சுவையாக்குவதோடு பல்வேறு உடலியல் செயல்களை ஊக்குவிக்கிறது. சுவைகளை அடிப்படையாகக் கொண்டே தாவரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் பழமையான தாவரங்களுள் ஒன்றான வால் மிளகு பற்றி காணலாம்.
வால்மிளகு ஒரு மணமூட்டும் தாவரமாகும். திப்பிலி, வெற்றிலை, நல்லமிளகு அனைத்தும் ஒரே வகையைச் சார்ந்தவை. வால்மிளகும் இவ்வகையிலேயே அடங்குகிறது. இந்தியாவில் மலைப்பிரதேசங்களில் காணப்படுகிறது.
முக்கியமாக அஸ்ஸாம், கேரளா மாநிலங்களில் காணப்படுகிறது. இது மரமேறும் கொடியாக வளர்க்கப்படுகிறது. இலங்கை, மலேசியா மற்றும் பல நாடுகளில் இது வளர்கிறது. மிளகைப் போல நிறத்திலும், உருவத்திலும் காணப்படுகிறது. ஆனால் வால் போல சிறிது நீண்டு காணப்படும். இதனாலேயே வால்மிளகு எனப்படுகிறது. இதன் காய், விதை, இலை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளது.
இதன் தாவரவியல் பெயர் பைப்பர் குபெபா என்பதாகும். இது பிப்பரேசியே என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் வருகிறது. வால்மிளகைப் பொடியாக்கியோ, நீரிலிட்டு கஷாயமாக்கியோ பயன்படுத்தலாம். இலைகளை தூளாக்கியோ, காய்த்தோ, அரைத்தோ பயன்படுத்தலாம்.
குணங்கள்
வாந்தியடக்கி, தொண்டை வலி நீக்கி, சளியகற்றி, வயிற்றுச் செயலூக்கி, வெப்பமூட்டி ஆகும்.
மருத்துவப் பயன்கள்
*வால்மிளகு நாலைந்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி, தேனில் குழைத்து உண்ண தொண்டை வலி தீரும், தொண்டை கரகரப்பு நீங்கும், இருமல் குணமாகும்.
*கொடி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி, அந்நீரில் வாய் கொப்பளிக்க தொண்டை வலி குணமாகும்.
*நாலைந்து வால்மிளகு ஒரு துண்டு சுக்கு இவற்றை பன்னீர்விட்டு அரைத்து நெற்றிப் பொட்டில் பூசிட தலைவலி தீரும்.
*வால்மிளகை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி இதோடு தேவையான இனிப்பு, பால் சேர்த்து அருந்த இருமல் நிற்கும்.
*வால்மிளகுத் தூளை பொடியாக்கி, நெய்யில் குழைத்து உண்ண வறட்டு இருமல் மாறும்.
*பாலில் சிறிதளவு மஞ்சள் பொடி, வால்மிளகுப் பொடி கலந்து அருந்திட தொண்டை வலி, சளி, இருமல் மாறும்.
*குரல் வளம் பெற வால்மிளகுத் தூளை அடிக்கடி தேனில் குழைத்து உண்ணலாம்.
*வால்மிளகில் இருந்து ஒரு வகையான எண்ணெய் எடுக்கப்பட்டு மருத்துவத்தில் பயன்படுத்துப்படுகிறது.
*வால்மிளகு உடலுக்கு வெப்பத்தைத் தரும், கபத்தை வெளியேற்றும் தன்மை கொண்டது.
– சா.அனந்தகுமார்
The post வளம் தரும் வால்மிளகு! appeared first on Dinakaran.
