திருச்சி அருகே வெடிகுண்டு வீசி எஸ்.ஐயை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை: 5 கொலை வழக்கு உட்பட 53 வழக்குகளில் தொடர்புடையவர்

திருச்சி: திருச்சி அருகே போலீசார் மீது வெடிகுண்டு வீசி தப்பிக்க முயன்ற 53 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை, என்கவுன்டரில் இன்ஸ்பெக்டர் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து டிஜிபி சங்கர்ஜிவால், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ரவுடிகள் ராஜ்ஜியத்துக்கு முடிவு கட்ட சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில் சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக ஏபிளஸ் மற்றும் ஏ பிரிவில் உள்ள ரவுடிகளை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய திட்டம் தீட்டப்பட்டது. அதில் குறிப்பாக 15 ரவுடிகளின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரவுடிகளின் பட்டியல் மாவட்ட வாரியாக அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சனமங்கலம் வனப்பகுதியில் ரவுடிகளின் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் (திருச்சி சரக காத்திருப்பு பட்டியல்), சப் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் போலீசார் நேற்று மதியம் 12 மணியளவில் வனப்பகுதிக்கு சென்று அதிரடி வேட்டை நடத்தினர்.

அப்போது, சிறுகனூர் திருச்சி-சென்னை பைபாஸ் ரோடு காட்டுப்பகுதியில் திருச்சி மாவட்டம் சர்க்கார்பாளையம் பனையக்குறிச்சியை சேர்ந்த முத்துக்குமார் மகன், பிரபல ரவுடி ஜெகன் (எ) கொம்பன் ஜெகதீசன் (33) என்பவர் பெட்ரோல் வெடிகுண்டு மற்றும் சணல் சுற்றிய நாட்டு வெடிகுண்டுகளுடன் வனப்பகுதியில் இருந்தது தெரியவந்தது. இவர் மீது 5 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் என திருச்சி, மதுரை, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 53 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி ஜெகன், சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கூலிப்படையினருடன் இணைந்து செயல்பட்டு கூலிப்படை தலைவனாகவும் இருந்துள்ளார்.

இதனால் ஜெகனை இன்ஸ்பெக்டர் கருணாகரன், நெருங்கி பிடிக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த ரவுடி ஜெகன், கையில் வைத்திருந்த பெட்ரோல் வெடிகுண்டை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது வீசியுள்ளார். அது தவறுதலாக
வேறு பக்கம் விழுந்து வெடித்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர், ஜெகனை பிடிக்க முயன்ற போது, சணல் வெடிகுண்டை வீசியுள்ளார். ஆனால் அது வெடிக்கவில்லை.

இதனையடுத்து எஸ்ஐ வினோத்குமார், ஜெகனை பிடிக்க முயன்ற போது அவர் வைத்திருந்த வீச்சு அரிவாளால் எஸ்ஐ வினோத்குமாரின் இடது கையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், அவருக்கு ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் கருணாகரன், தற்காப்பிற்காக தான் கையில் வைத்திருந்த பிஸ்டல் மூலம் 2 ரவுண்டு சுட்ட போது ஜெகனின் மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் ஜெகன் சம்பவ இடத்தில் கீழே சாய்ந்தார். இதனையடுத்து போலீசார், ரவுடி ஜெகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து, ஜெகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் உடல் பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த எஸ்ஐ வினோத்குமார், லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், என்கவுன்டர் நடந்த இடத்தில் திருச்சி சரக டிஐஜி பகலவன், திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தனர்.

நாட்டு துப்பாக்கி, அரிவாள் மீட்பு
என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் சுமார் 3 அடி உயரமுள்ள வீச்சு அரிவாள், நாட்டு துப்பாக்கி, வெடிகுண்டுகள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பெட்ரோல் வெடிகுண்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் வந்து தடயங்களை சேகரித்தனர்.

நடந்தது துப்பாக்கிச்சூடுதான்: திருச்சி எஸ்பி விளக்கம்
என்கவுன்டர் குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் நேற்று மாலை எஸ்பி வருண்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ரவுடி ஜெகன் எஸ்ஐயின் இடது கையில் வெட்டியுள்ளார். தொடர்ந்து, தற்காப்புக்காக ஆய்வாளர் இரண்டு முறை சுட்டுள்ளார். இதில் காயமடைந்த ரவுடி ஜெகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். லால்குடி அரசு மருத்துவமனையில் உள்ள ரவுடியின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. காயமடைந்த எஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது என்கவுன்டர் கிடையாது. போலீசாரின் துப்பாக்கி சூடு சம்பவம். சம்பவம் நடந்த பகுதியில் வழிப்பறி நடப்பதாக டீமுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது, ஜெகன் இருப்பது தெரியவந்தது.

ரவுடி ஜெகன் குற்றச்செயல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் ஷேர் செய்துள்ளார். தற்போது வளர்ந்து வரும் ரவுடிகளுக்கு இவர் கேங் லீடர் மாதிரி செயல்பட்டு வந்துள்ளார். ராமஜெயம் கொலை வழக்கிற்கும், தற்போது நடந்துள்ள சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை. முதல் தகவல் அறிக்கை அளிக்க உள்ளோம். தொடர்ந்து, நீதிபதியின் விசாரணைக்கு அனுப்ப உள்ளோம். முக்கிய நபர்களை மிரட்டியும், வழிப்பறியும் செய்து வந்துள்ளார். இவர் மீது 53 வழக்குகள் உள்ளது. ஜெகன் சிறையில் இருந்த போது, அவருடன் ஏராளமான கூட்டாளிகள் இருந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து பல்வேறு சதித்திட்டங்களை தீட்டியுள்ளார். முக்கிய நபர்களை மிரட்டியிருக்க வாய்ப்பு உள்ளது. இது சம்பந்தமாக திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு புகார் வரவில்லை. ரவுடி ஜெகன் ஒரு ‘கேங்ஸ்டர்’. ஜெகன் ஏபிளஸ் ரவுடியை சேர்ந்தவர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஜெகனின் கூட்டாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு முக்கியமான குற்றவாளிகளை பிடித்துள்ளோம். போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். குண்டாஸ் சட்டத்திற்கு வலிமை உள்ளது. எஸ்ஐ வினோத்குமார், மயக்கத்தில் உள்ளார். சம்பவம் நடந்த பிறகு சிறுகனூர் இன்ஸ்பெக்டர் சுமதி சென்று பார்த்த போது தான் துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்த உள்ளோம். விசாரணை அதிகாரியாக லால்குடி டிஎஸ்பி அஜெய் தங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். ரவுடி ஜெகன் மீது 8 முறை குண்டாஸ் வழக்குகள் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரபல ரவுடியாக உருவானது எப்படி?
திருச்சி மாவட்டம், சர்க்கார்பாளையம் தாலுகா பனையக்குறிச்சியை சேர்ந்த ஜெகன், பிளஸ் 2 வரை படித்துள்ளார். இளம் வயதில் இருந்தே அடிதடி உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய ஜெகன், சிறார்களுக்கு பணத்தாசை காட்டி அவர்களை சட்ட விரோத செயல்களில் ஈடுபட வைத்துள்ளார். இப்படி பிரபல ரவுடியானதும், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கூலிப்படைக்கு தேவையான ஆட்களை அனுப்பி வைத்தாகவும் தெரிய வருகிறது. தோப்பு பகுதிகளுக்கு ரவுடிகளை வரவழைத்து, அங்கு அவ்வப்போது விருந்து கொடுப்பதை ஜெகன் வழக்கமாக வைத்துள்ளார். கடந்த மே மாதம் ஜெகன் தனது பிறந்த நாளை முன்னிட்டு கூட்டாளிகளான ரவுடிகளை நேரில் வரவழைத்து தடபுடலான விருந்து வைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

The post திருச்சி அருகே வெடிகுண்டு வீசி எஸ்.ஐயை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை: 5 கொலை வழக்கு உட்பட 53 வழக்குகளில் தொடர்புடையவர் appeared first on Dinakaran.

Related Stories: