காஞ்சிபுரத்தில் வழி தெரியாமல் தவித்த ஒடிசா மூதாட்டி மீட்பு


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வழிதெரியாமல் தவித்த மூதாட்டியை மீட்டு ரயில் மூலம் ஒடிசா அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக, ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மைய நிர்வாகிகள், போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டினர். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மூதாட்டி ஒருவர் அழுதபடி நின்றுள்ளார். இதை பார்த்த பயணிகள் அவரிடம் விசாரித்தபோது இந்தியில் பேசியுள்ளார். உடனே இதுகுறித்து காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி அங்கு வந்த பெண்கள் சேவை மைய நிர்வாகிகள், மூதாட்டியிடம் விசாரித்தபோது, பத்மாவதி மாஜி (70) என்பதும் குடும்ப பிரச்னை காரணமாக காஞ்சிபுரம் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, காஞ்சிபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் மூதாட்டியை சேர்த்தனர். சில நாட்கள் தங்கிய மூதாட்டி, இந்த இல்லத்தில் தங்க எனக்கு விருப்பமில்லை. என்னை ஒடிசாவிற்கே அனுப்பி வைத்துவிடுங்கள் என கூறியுள்ளார். இதனால் மூதாட்டி குறித்து ஒடிசா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் காவலர்கள் சந்தோஷ்குமார், மோனலிசா நாயக், மினாட்டி பாலா தாலை ஆகிய 3 பேர் காஞ்சிபுரம் வந்தனர்.

பின்னர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் முன்னிலையில் மூதாட்டி பத்மாவதி மாஜியை ஒடிசா போலீசாரிடம் காஞ்சிபுரம் மாவட்ட சமூகநல அலுவலர் கல்யாணி நேற்று ஒப்படைத்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜான்சி, பணியாளர் கலையரசி ஆகியோர் உடனிருந்தனர். அதன்பிறகு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் போலீசாருடன் மூதாட்டியை ஒடிசா அனுப்பி வைத்தனர். இதற்காக ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மைய நிர்வாகிகளை பகுதி மக்கள் பாராட்டினர்.

The post காஞ்சிபுரத்தில் வழி தெரியாமல் தவித்த ஒடிசா மூதாட்டி மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: