×

நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள பாசன ஏரிகளின் கொள்ளளவு 100 எட்டியது: குமரியில் 388 ஏரிகள் நிரம்பின; அதிகாரிகள் தகவல்

* சிறப்பு செய்தி
நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள பாசன ஏரிகளின் கொள்ளளவு 100 சதவீதம் எட்டி உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பொழிகிறது. அதன்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 21ம் தேதி தொடங்கியது. இந்த பருவமழை காலத்தில், வருடத்தின் மொத்த மழைப்பொழிவில் 48% தமிழகத்துக்கு கிடைக்கிறது. மேலும், கடந்த ஆண்டுகளை விட அதிக புயல்கள் உருவாக கூடும் எனவும், இந்த ஆண்டு இயல்பை விட 38% முதல் 75% வரை கூடுதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையானது, சராசரியை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தென்மேற்கு பருவமழையின்போதும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை அதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை என மழை பெய்து வருவதால், தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பிவருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து காணப்பட்டது.

நவம்பர் 14ம் தேதி நிலவரப்படி சிதம்பரத்தில் 119.5 மி.மீ., திருவெண்ணைநல்லூரில் 108 மி.மீ., காட்டுமன்னார் கோவிலில் 102 மி.மீ., மதுராந்தகத்தில் 97 மி.மீ., மழையானது பதிவாகியுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகளவு மழை பதிவானதை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் அதிகளவு மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பி வருகின்றன. அதன்படி நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14,134 பாசன ஏரிகளில் 951 பாசன ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 1,519 ஏரிகள் 75 விழுக்காடு கொள்ளளவிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது. அதே சமயம், 1,375 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. மிக குறைந்த அளவில் 7,867 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை தமிழ்நாட்டில் இந்தாண்டு இயல்பை விட 35% அதிகமாக பெய்ததால் முக்கிய ஏரிகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டுமளவுக்கு நீர் உள்ளது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் மற்றும் பூண்டி நீர் தேக்கங்களில் போதுமான அளவுக்கு நீரின் கொள்ளளவு உள்ளது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளில் 90% சதவீதத்துக்கும் அதிகமாக நீர் நிரம்பியுள்ளது. இதனிடையே பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளின் மொத்தம் நீர் கொள்ளளவு 13.213 டிஎம்சி. அதில், தற்போது 9.381 டிஎம்சி நீர் நிரம்பி உள்ளது.

அதிகபட்சமாக 2,040 பாசன ஏரிகள் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் 388 பாசன ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 697 பாசன ஏரிகளில் 95 ஏரிகள் முழு கொள்ளளவான 100 சதவீதம் நிரம்பியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் 543 ஏரிகளில் 68 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பியுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் நீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும். அதன்படி மழை தொடர்ந்து பெய்து ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணையின் பாதுகாப்பு கருதி நீர் திறந்து விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* 22 அடியை எட்டியது செம்பரம்பாக்கம்
தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழையின் பரவலாக பெய்தது. அதனால், சென்னையில் உள்ள பிரதான ஏரியாக இருக்கக்கூடிய செம்பரம்பாக்கம் முழுகொள்ளளவை எட்டி உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி கனமழை பெய்து வரும் நிலையில் மீண்டும் முழுகொள்ளளவை செம்பரம்பாக்கம் ஏரி எட்டியுள்ளது. அதன்படி நடப்பாண்டில் 2வது முறையாக செம்பரம்பாக்கம் ஏரி 22அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

100% கொள்ளளவை எட்டிய பாசன ஏரிகள்
மாவட்டம் முழு
கொள்ளளவு
100% 76 முதல்
99% வரை 51 முதல்
75% வரை
கன்னியாகுமரி 388 956 481
திருவண்ணாமலை 95 70 119
தென்காசி 68 35 41
கிருஷ்ணகிரி 44 11 11

The post நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள பாசன ஏரிகளின் கொள்ளளவு 100 எட்டியது: குமரியில் 388 ஏரிகள் நிரம்பின; அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டம்; விவேகானந்தர்...