இதில், மூத்த துணை தேர்தல் ஆணையர் மற்றும் மக்களாட்சி மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச பயிற்சி நிறுவனத்தின் தலைமை இயக்குனர் தர்மேந்திர ஷர்மா, மூத்த துணை தேர்தல் ஆணையர் நிதேஷ் வியாஸ், துணை தேர்தல் ஆணையர் மனோஜ்குமார் சாஹூ, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவட்சவா, தமிழ்நாடு சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பங்கேற்றனர்.
இதுதவிர ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பு மற்றும் அதற்கான ஆயத்த பணிகளின் முக்கிய அம்சங்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்தலில் மின்னணு இயந்திரங்கள் மூலமே வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. அதற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், உபகரணங்கள், அதிக எண்ணிக்கையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை இரண்டாக பிரிப்பது, தேர்தல், பாதுகாப்பு பணியாளர்கள், மாநில சட்டம் -ஒழுங்கு நிலை, வாக்குச்சாவடி வசதிகள், இறுதி வாக்காளர் பட்டியலை குளறுபடி இல்லாமல் வெளியிடுவது தொடர்பானது குறித்து விவாதிக்கப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
* தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் 2024 ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லாத மாநிலம் என்று தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கூறியுள்ளேன். இளைஞர்களை 100 சதவீதம் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவில்லை. அதுபற்றி தேர்தல் அறிவிக்கும்போதுதான் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்” என்றார்.
The post தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.
