ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி சிவன் கோயிலில் பிரதோஷ விழா


ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளியில் உள்ள சிவன் கோயிலில் நேற்று மாலை மகா பிரதோஷ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி கிராமத்தில் புகழ்பெற்ற மிகப் பழமையான  பள்ளிகொண்டீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. பெரும்பாலான சிவன் கோயில்களில் லிங்க வடிவில் காட்சி சிவபெருமான், இங்கு மனித வடிவில் பள்ளி கொண்ட நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருவது விசேஷமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், சுருட்டப்பள்ளி சிவன் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடைபெற்றது. பிரதோஷ தினத்தை முன்னிட்டு நேற்று காலை விநாயகர், வால்மீகீஸ்வரர், மரகதாம்பிகா சமேத தட்சிணாமூர்த்தி, வள்ளி-தெய்வானை சமேத முருகன், பள்ளிகொண்டீஸ்வரர் ஆகிய சுவாமி சன்னதிகளில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னர், நேற்று மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை வால்மீகீஸ்வரர் சன்னதிக்கு எதிரே உள்ள நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அருகம்புல், வில்வ இலை மற்றும் மலர்களால் நந்தீஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இப்பூஜைகளை தலைமை குருக்கள் கார்த்திகேசன் சிவாச்சாரியார் சிறப்பாக செய்து வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் கோயில் சேர்மன் ஏவிஎம்.முனிசந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி சிவன் கோயிலில் பிரதோஷ விழா appeared first on Dinakaran.

Related Stories: