பாரிமுனை பகுதியில் துப்பாக்கி, கத்தி, பர்தாவுடன் திரிந்த ராஜஸ்தான் வாலிபர்: போலீசார் விசாரணை

திருவெற்றியூர்: பாரிமுனை பகுதியில் கத்தி, பொம்மை துப்பாக்கியுடன் திரிந்த ராஜஸ்தான் வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால் தற்போது தலைமைச் செயலகம், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் ரிசர்வ் வங்கி சுரங்க பாலம் பகுதியில் நேற்று சந்தேகப்படும்படியாக நடந்து வந்த ஒரு வாலிபரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

அதைத்தொடர்ந்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தா, துப்பாக்கி, ஒரு கத்தி போன்றவை இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த துப்பாக்கியை சோதனை செய்தபோது, டம்மி துப்பாக்கி என தெரியவந்தது. இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று, வடக்கு கடற்கரை காவல்நிலைய ஆய்வாளர் ராஜாசிங், உதவி ஆய்வாளர் பிரேம்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் பிடிபட்டவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேவர்ராம்(22) என்பது தெரிய வந்தது. இவர் நங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு கடந்த 1ம் தேதி முதல் அவரை வேலையில் இருந்து நிறுத்தி விட்டனர். அதைத் தொடர்ந்து ஊருக்குச் செல்லாமல் அவர் பெரியமேடு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி வந்துள்ளார். இவர் எதற்காக பொம்மை துப்பாக்கி, கத்தி, பர்தா போன்றவற்றை வைத்திருந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வாலிபரின் உறவினரை அழைத்து அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாரிமுனை பகுதியில் துப்பாக்கி, கத்தி, பர்தாவுடன் திரிந்த ராஜஸ்தான் வாலிபர்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: