அதிக வேகம், பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் டி.டி.எப். வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து: போக்குவரத்து துறை உத்தரவு

சென்னை: அதிக வேகம் மற்றும் பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது உள்ளிட்டவைக்காக டி.டி.எப். வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம் வெள்ளியங்காடு பகுதியைச் சார்ந்த வைகுந்தவாசன் எனப்படும் டிடிஎப் வாசன். பிரபல யூ-டியூபரான டிடிஎப் வாசன், பைக்கில் அதிவேகமாகச் சென்று வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த மாதம் 17ம் தேதி காஞ்சிபுரம் அருகே பைக்கில் அதிவேகமாக ஓட்டி வீலிங் சாகசம் செய்து விபத்தில் சிக்கினார்.

இதையடுத்து கடந்த 19ம் தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து டிடிஎப் வாசன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, டிடிஎப் வாசன் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, யூடிப் தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடும்படி கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் டிடிஎப் வாசனின் தொடர் செயல்பாடுகள் சாலைகளில் செல்லும் இதர வாகனங்களுக்கும், வாகன ஓட்டிகளின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், இவரைப் போன்று பிற இளந்தலைமுறையினரும் ஆகிவிடக்கூடாது என்பதாலும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், இவருக்கு எதிராக காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகளைக் கருத்தில் கொண்டும் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய ஒரு காரணம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்க ஏதுவாக அவருக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும் அவர் தனது தரப்பில் எதுவும் தெரிவிக்காததாலும், அவரது ஓட்டுநர் உரிமம் அக்.6ம் தேதி முதல் 2033ம் ஆண்டு அக்.5ம் தேதிவரை பத்து வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதுபோல பிற வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் அச்சுறுத்தும் வகையில், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பைக், கார் ஓட்டுபவர்களின் உரிமங்களும் பத்து வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. டிடிஎப் வாசன் மீது சென்னை போக்குவரத்து காவல் துறையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், தலைகவசம் அணியாதது, குறைபாடுள்ள நம்பர் பிளேட் உள்ளிட்ட 8 வழக்குகள் உள்ளன.

The post அதிக வேகம், பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் டி.டி.எப். வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து: போக்குவரத்து துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: