குடும்பம் எனும் கதம்பம்!

நன்றி குங்குமம் டாக்டர்

`குடும்பம்தான் சமூகத்தின் சிறிய அலகு. சமூகம் என்பது ஒரு குடும்பம்’ என்று சொல்வார்கள். அழகான ஆரோக்கியமான குடும்பங்களிலிருந்தான் சிறந்த மனிதர்கள் உருவாகிறார்கள். குடும்ப உறவுகளை ஆரோக்கியமாகவும், அன்னியோன்னியத்தோடும் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். இது நம்மை பாதுகாப்பானவர்களாகவும் உற்சாகமானவர்களாகவும் வைத்திருக்க பெரிதும் உதவும்.

1. தினமும் காலை 5 – 6 மணிக்கு எழும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதிகாலை எழுவது, ஒரு நாளை நன்கு திட்டமிட உதவும். மேலும், நாள் முழுவதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும். குழந்தைகள் அதிகாலையில் எழுந்து படித்தால், பாடங்கள் நன்கு மனதில் பதியும். அவர்களின் நினைவாற்றல் மற்றும் சிந்தனைத்திறன் (ஐ.க்யூ) மேம்படும்.

2. தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம் போன்ற உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பயிற்சிகளைச் செய்யலாம். உடற்பயிற்சிகளை வீட்டில் செய்வதற்கு முன் தகுந்த நிபுணர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றுச் செய்வது நல்லது.

3. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மதியுங்கள். அனைவரின் விருப்பங்களையும், ரசனைகளையும், சுவையையும் நன்கு அறிந்துகொள்ளுங்கள். அன்பைப் பகிர்வது என்பது பொறுப்பெடுத்துக்கொள்வது, போதுமான சுதந்திரம் தருவது. எனவே, மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள். ஆரோக்கியமான உரையாடலைச் செய்வதற்கான குடும்ப ஜனநாயகம் எப்போதும் வீட்டில் இருக்கட்டும்.

4. தினமும், ஒருவேளை உணவையாவது குடும்பத்தில் உள்ள அனைவருடனும் சேர்ந்து உண்ணுங்கள். முடிந்தவரை தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுங்கள். ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும்போதுதான், ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்கள், வெறுப்புகள், தேர்வுகளை நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடியும். குழந்தைகளை உணவு நேரத்தில் சுதந்திரமாக இயங்கவிடுங்கள். தங்கள் முன் உள்ளவற்றை அவர்கள் விருப்பப்படி சாப்பிடட்டும். அதே சமயம், எச்சில் விரலை சூப்பக்கூடாது. கீழே சிந்தாமல், பொறுமையாகச் சாப்பிட வேண்டும். சிந்திய பருக்கைகளை கையில் எடுத்து சாப்பிடக் கூடாது போன்ற ஆரோக்கியமான, சுத்தமான உணவுப்பழக்கங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.

5. தொலைக்காட்சி, மொபைலில் நேரம் செலவிடுவதற்குப் பதில், வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருமே சேர்ந்து அமர்ந்து மனம்விட்டுப் பேசுங்கள். உரையாடல் பாசிடிவ்வான சொற்களில் இருக்கட்டும். பொருளாதாரம் உள்ளிட்ட குடும்பத்தின் சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கட்டும்.

6.குடும்ப சூழ்நிலையைப் பற்றி மட்டுமின்றி, பொதுவான விஷயங்களையும் பேசுங்கள். கலகலப்பான, நகைச்சுவைகள் நிறைந்த உரையாடல்களை உருவாக்குங்கள்.

மனிதர்களைப் பற்றி பேசுவது, சம்பவங்களைப் பற்றி பேசுவது, கருத்தியல்களை (கான்செப்ட்ஸ்) பற்றி பேசுவது என உரையாடல்களை மூன்று வகைகளாகச் சொல்வார்கள். மனிதர்களை பற்றி பேசுவது சாதாரண நிலை. இதில் உரையாடல் நிகழ்வதைத் தவிர, வேறு பலன்கள் ஏதும் இல்லை. சம்பவங்களைப் பற்றி பேசுவது அதற்கு அடுத்த நிலை. இது, நமது அனுபவங்களை மற்றவர்களின் அனுபவங்களுடன் ஒப்பிட்டுக்கொள்ளவும், இதனால் நம்மைச்செம்மைப்படுத்திக்கொள்ளவும் உதவும்.

கருத்தியல்களைப் பற்றி பேசுவது மூன்றாவது நிலை. இது, நம்மைப் பற்றி மட்டுமின்றி நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களையும் இந்த சமூகத்தைப் பற்றியும் புரிந்துகொள்ள உதவும். இந்த மூன்று நிலை உரையாடல்களுமே தவிர்க்க இயலாதவை என்றாலும், உரையாடல்களை மூன்றாவது நிலை நோக்கிக்கொண்டு செல்லப் பழகுங்கள்.

7. வாரம் ஒருமுறை எங்காவது வெளியில் செல்வது, ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலா செல்வது என்பதைப் போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் குடும்பத்தினருடன் இனிமையான தருணங்களை உருவாக்கி, நீங்கள் ஒரு குடும்பம் என்கிற ஐக்கிய உணர்வையும் உணர்வுபூர்வமான மனநிலையையும் உங்களுக்கு இடையே உருவாக்கும்.

8.பண்டிகை நாட்களையும் பிறந்த நாள், திருமண நாள் போன்ற வீட்டு விசேஷங்களையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். `வேலை இருக்கிறது வர முடியாது. நீங்களே கேக் கட் பண்ணிடுங்க, எனக்கு மீட்டிங் இருக்கு’ என்று சொல்வதை இயன்றவரை தவிருங்கள். வீடும் வேலையும் நமது இரண்டு கண்கள். ஒன்றை ஒன்று பாதிக்காதவாறு கையாளுங்கள்.

9.சமையல் முதல் எல்லா வீட்டு வேலைகளையும், பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று இல்லை. சமைப்பது, துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஆண்களும் உதவுவதில் தவறே இல்லை. நம் வீட்டு வேலையைச் செய்வதில் நமக்கு என்ன தயக்கம் என்ற மனநிலை தேவை. வீட்டு வேலைகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளுங்கள். குறைந்தபட்சம் சமையல் செய்யாவிட்டாலும் சமையலுக்குத் தேவையான சிறுசிறு உதவிகளையாவது செய்துகொடுங்கள். வார இறுதிகளில் சமைப்பது, வீட்டை சுத்தமாக்குவது போன்ற வேலைகளைப் பகிர்ந்துகொள்வது கணவன் மனைவிக்கு இடையே நல்ல இணக்கத்தையும் அன்பையும் ஏற்படுத்தும்.

10. குடும்பத்துக்கு என நீங்கள் ஒதுக்கும் நேரத்தை சிறப்பான நேரமாக பயன்படுத்துங்கள் (குவாலிட்டி டைம்). எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைவிட எப்படி அந்த நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதே முக்கியம். எனவே, நீங்கள் செலவிடும் நேரம் எப்போதும், நினைவில் நிற்கும் இனிமையான தருணங்களாக, ஆரோக்கியமான தருணங்களாக இருக்கட்டும். இந்த உலகில் நாம் விட்டுச்செல்வது நம்மைப் பற்றிய நினைவுகளை மட்டும்தான். அந்த நினைவுகள் நல்ல நினைவுகளாக இருக்க நாம் செலவிடும் நேரம் சிறந்த நேரமாக இருக்க வேண்டும்.

தொகுப்பு: லயா

The post குடும்பம் எனும் கதம்பம்! appeared first on Dinakaran.