நன்றி குங்குமம் தோழி
நிலாவை காட்டி, கதை சொல்லி சோறூட்டும் காலம் போய் செல்போனில் நிஞ்சா, ஹட்டோரி கார்ட்டூன் நிகழ்ச்சிகளை காட்டி சோறூட்டி வருகின்றனர் இன்றைய பெற்றோர்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம் என்றும் அவர்கள் உணவு உண்டால் போதும் என்றும் நினைக்கும் தாய்மார்கள் அப்போதைய தேவைக்காக செல்போன்களை கொடுத்து உணவு ஊட்டி விடுகின்றனர். அதனால் ஏற்படும் பின் விளைவுகளை கணிக்க மறந்து போய் விடுகின்றனர்.
ஒரு கட்டத்திற்கு மேல் செல்போன் இல்லையெனில் உணவு உண்ண மறுக்கும் குழந்தைகள் நாளடைவில் அதற்கு அடிமையாகி போகின்றனர். செல்போனுக்கு அடிமையாக்கப்படும் குழந்தைகள் சிறிது சிறிதாக பாதிக்கப்பட்டு சில மன நோய்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். விளைவு அவர்களின் நடத்தைகளில் எதிரொளிக்கின்றது. சரியாக யாரிடமும் பேசாமல், அவர்களுக்கென்ற ஒரு கற்பனை உலகத்தில் இருப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கிக் கொள்கின்றனர். இந்த மனநோயினை விர்சுவல் ஆட்டிசம் என மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.
இந்த விர்சுவல் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநிலை, அவர்களின் நடவடிக்கை மற்றும் அதிலிருந்து வெளிவர அவர்களுக்கான சிகிச்சை முறைகளை விளக்குகிறார் உளவியல் ஆலோசகர் ரேவதி மோகன்.‘‘பொதுவாக ஆட்டிசம் என்பது பிறப்பிலிருந்தே இருக்கும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடு (Neuro developmental disorder) என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். சில சமயங்களில் மன இறுக்கத்தாலும் இந்த ஆட்டிசம் ஏற்படுகிறது. ஆட்டிசம் கண்டறியப்பட்ட குழந்தைகள் நரம்பியல் வளர்ச்சி தாமதங்கள், சமூக தொடர்பு, தகவல் தொடர்பு மற்றும் உணர்ச்சித் திறன் போன்றவற்றில் பின்தங்கி இருப்பார்கள். இதில் தற்போது பரவலாக காணப்படும் ஒரு வகை விர்சுவல் ஆட்டிசம் (Virtual Autism).
இந்த விர்சுவல் ஆட்டிசம் என்பது தற்போது உள்ள 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடையே அதிகம் காணப்படும் ஒரு வகையான நோய். குழந்தைகள் எவ்வளவு தான் ஆரோக்கியமாக இருந்தாலும் நான்கு மணி நேரத்திற்கு அதிகமாக தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் இவ்வகையான நரம்பியல் கோளாறு பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இந்த விர்சுவல் ஆட்டிசம் என்பது நரம்பியல் வளர்ச்சி விலகல் (Neuro developmental deviation) எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள்.
இது நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியில் ஏற்படும் வித்தியாசமான அல்லது அசாதாரணமான மாற்றங்களைக் குறிக்கும். இதில், பெரும்பாலான நேரங்களில், குழந்தைகள் ஒரு மெய்நிகர் சூழலில் இருந்து சில உணர்வுகளை (காட்சி அல்லது செவிவழி) மட்டுமே பெறுகிறார்கள். இதனால், குழந்தைகள் பேச்சு தாமதத்திற்கு வழிவகுக்கும். அறிவாற்றல் திறன்களும் பாதிக்கப்படும். மேலும், பலவீனமான மொழி வளர்ச்சி, குறுகிய கவனம், அதிவேகத்தன்மை, எரிச்சல், மன இறுக்கம், அசாதாரண நடத்தை, மந்தமான அறிவாற்றல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
செல்போன் திரையில் செலவிடும் நேரம் ஆரம்ப காலங்களில் இருந்து நாளுக்கு நாள் அதிகரிக்கும், பிறரிடம் பேசும் போது கண்ணை பார்க்காமல் இருப்பது, அவர்களின் பெயரை கூப்பிட்டால் கூட கவனிக்காமல் / பதில் அளிக்காமல் இருப்பது, அவர்கள் பார்க்கும் வீடியோக்களில் இருந்து ஒரு சில வார்த்தைகளை தொடர்ந்து காரணமின்றி திரும்பத் திரும்பச் சொல்வது, வித்தியாசமான முறையில் பேசுவது (கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல் பேசுவது), பேசக் கற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படுத்துவது, காரணமின்றி ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்வது, மேலும் சில பொதுவான உணர்வுகளில் இருந்து மாறுபட்டு இருப்பது பொன்றவை இந்த விர்சுவல் ஆட்டிசத்தின் சில அறிகுறிகள்’’ என்றவர் செல்போன் பயன்படுத்தும் கால அளவினை வெளியிட்டுள்ள பிற நாடுகளையும் அதன் நிபந்தனைகளையும் கூறுகிறார்.
பிறந்தது முதல் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் செல்போன்களின் திரைகளை கொண்டு செல்லக்கூடாது. இரண்டு முதல் நான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகபட்சமாக 20 நிமிடங்கள், நான்கு முதல் எட்டு வயதிலிருக்கும் குழந்தைகள் ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் பயன்படுத்தலாம். எட்டு முதல் 16 வரையிலான குழந்தைகள் கல்வி, ஆன்லைன் வகுப்புகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என அதிகபட்சமாக 1 மணி நேரம் பயன்படுத்தலாம்.
16 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிகபட்சமாக 2 மணி நேரம் உபயோகிக்கலாம் எனவும் இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (Indian Academy of Paediatrics) மற்றும் அமெரிக்கன் பீடியாட்ரிக் அசோசியேஷன் (American Paediatric Association), சைனீஸ் அதாரிட்டீஸ் (Chinese Authorities) வெளியிட்டுள்ளனர்’’ என்றவர், விர்சுவல் ஆட்டிசம் வராமல் எவ்வாறு குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளை அதன் பாதிப்பிலிருந்து எவ்வாறு வெளியே கொண்டு வர வேண்டும் என்பதனையும் விவரிக்கிறார்.
‘‘பொதுவாக மனிதனுக்கு 6-8 மணி நேர உறக்கம் அவசியம். குழந்தைகளுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் 8-9 மணி நேரம் தூக்கம் மிக அவசியம். இரவு 10 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை வரைவு விதிமுறைகளின்படி குழந்தைகளுக்கு எந்த கைபேசியும் வழங்கக் கூடாது. மேலும், செல்போன் பயன்பாட்டை அகற்றும் முயற்சிகளை குழந்தைகள் மேற்கொள்கின்றார்களா என பெற்றோர் கவனிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் முதலில் அருகில் உள்ள மனநல ஆலோசகரை அணுக வேண்டும். முதலில் அடிப்படை ஆலோசனை பெற்றதும், ஸ்பீச் தெரபி, ஆக்குபேஷனல் தெரபி, சமூக மேம்பாடு போன்றவற்றை மேம்படுத்துவதற்கான சிகிச்சை பயிற்சி முறையை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பெற்றோர்கள் குழந்தைகளுடனான தங்களின் நேரத்தை அதிகரிக்கணும். உதாரணத்திற்கு, குழந்தைகளை வெளி இடங்களுக்கு அழைத்து செல்லுதல், அவர்களிடம் பேசுவதற்கு, அவர்களுடன் ஒன்றாக இணைந்து ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளில் அவர்களின் ஈடுபாட்டினை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தினையும் குறைக்க வேண்டும்.
தனியார் மருத்துவ குழு மட்டும் அல்லாது அரசும் இதற்கு உதவி செய்கிறது. அதன் ஒரு பகுதியாக ஆட்டிசம் என்று இல்லாமல் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விவரங்களை கண்டறிய அரசு மேற்கொண்ட ஒரு முயற்சிதான் District Early Intervention Centre. இந்த அரசு சேவை மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகிறது. அங்கு பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இதன் மூலம் அங்குள்ள ஆலோசனை குழுவினர் குழந்தைகளின் தேவைக்கு ஏற்றது போல சிகிச்சை முறையினை மேற்கொள்வார்கள்’’ என்றவர், குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் தங்களின் செல்போன் பயன்பாட்டின் அளவினை குறைத்துக் கொள்வதால், அதன் மூலம் உண்டாகும் மனநல வியாதிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் கோரிக்கை வைக்கிறார்.
தொகுப்பு: காயத்ரி காமராஜ்
The post குழந்தைகளை தாக்கும் விர்சுவல் ஆட்டிசம்! appeared first on Dinakaran.