“குடிக்க பணம் கேட்டு தினமும் தொந்தரவு’’ கைநாட்டு வைத்து மகன் மீது போலீசில் கொடுத்த புகாரை திரும்ப பெற்ற தாய்: மனதை கரைத்த பாசப்பிணைப்பு

பெரம்பூர்: குடிப்பதற்கு பணம் கேட்டு தினமும் தொந்தரவு செய்யும் மகன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் கொடுத்த கொஞ்ச நேரத்தில், ‘மகனை எதுவும் செய்துவிடாதீர்கள்’ என்று போலீசில் கெஞ்சிய தாயின் செயல் நெகிழவைத்துள்ளது.

சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியை சேர்ந்தவர் சகாயமேரி (60). இவரது கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்டார். இவரது மகன் தாஸ். இவர் தினமும் குடிப்பதற்கு பணம் கேட்டு தாயை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மகனின் கொடுமை நாளுக்குநாள் அதிகரித்துவந்ததால் சகாயமேரி கடும் மன உளைச்சல் அடைந்து உள்ளார்.

இந்த நிலையில் மகன் மீது புகார் கொடுக்க எம்கேபி.நகர் காவல் நிலையத்துக்கு சகாயமேரி வந்துள்ளார். ஆனால் அவருக்கு எழுத படிக்க தெரியாது என்பதால் அங்கிருந்த ஒருவரிடம், ‘’எனது மகன் தினமும் பணம் கேட்டு கொடுமைப்படுத்துகிறான். அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று எழுத சொல்லி பின்னர் அந்த லட்டரில் தனது கைநாட்டு வைத்து அவற்றை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் உடனடியாக அவருக்கு சிஎஸ்ஆர். வழங்கி நாளை வரும்படி மூதாட்டியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இந்த தகவல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரின் கவனத்துக்கு சென்றதையடுத்து சகாயமேரின் மகன் தாஸைகாவல் நிலையம் அழைத்து கடுமையாக எச்சரித்தனர். அப்போது போலீசார், “இனி உனது தாயிடம் தகராறில் ஈடுபட்டால் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துவிடுவோம்’ என்று எச்சரித்தனர். இதன்பிறகு காவல் நிலையத்துக்கு வந்த சகாயமேரி, “தனது மகனை எதுவும் செய்து விட வேண்டாம்’’ என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார். இதையடுத்து தாசுக்கு புத்திமதி கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post “குடிக்க பணம் கேட்டு தினமும் தொந்தரவு’’ கைநாட்டு வைத்து மகன் மீது போலீசில் கொடுத்த புகாரை திரும்ப பெற்ற தாய்: மனதை கரைத்த பாசப்பிணைப்பு appeared first on Dinakaran.

Related Stories: