கலைஞரின் சமச்சீர் கல்வி முறையைத் தொடர வேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்

பூந்தமல்லி: பூந்தமல்லியில் நேற்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு நடைபெற்றது. இதில், கலைஞரின் சமச்சீர் கல்வி முறையைத் தொடர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் இரா.தீனதயாள் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி வரவேற்றார். மாநில பொருளாளர் ருக்மாங்கதன், தலைமை செயலாளர் ஜெயராமன், மாநில துணைத் தலைவர் வின்சென்ட் ஆரோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், மாணவர்களுக்கு பாடம் நடத்தும் சூழலை எமிஸ் என்கிற இணையதள பதிவேற்றம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி, ஆசிரியர்களை மிகுந்த மனஅழுத்தத்துக்குத் தள்ளியுள்ளது. கடந்த செப்டம்பர் 5ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், எமிஸ் இணைய தளத்தில் இனி ஆசிரியர்கள் வருகை, மாணவர்கள் வருகை பதிவு மட்டும் போட்டால் போதும். மற்ற பதிவுகளை ஆசிரியர் பயிற்றுநர்களை கொண்டு மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். அதை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை, எதிர்கால மாணவர்களின் நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்து, கலைஞரின் சமச்சீர் கல்வி முறையை மீண்டும் தொடர வேண்டும்.

கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை விரைந்து களைய வேண்டும். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான டிட்டோ-ஜேக் வரும் 13ம் தேதி சென்னையில் 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடத்த திட்டமிட்டுள்ள ஆர்பாட்டத்தில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post கலைஞரின் சமச்சீர் கல்வி முறையைத் தொடர வேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: