புதுக்கோட்டை, செப்.29: புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் பேரவைக்கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. பேரவைக்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பேரவையை வாழ்த்தி முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி பேசும்போது கூறியதாவது:
சாதி, மதம் மற்றும் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இன்றி கூட்டுறவு சித்தாந்தத்தின் அடிப்படையில் உறுப்பினர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் செயல்படுவோம் என இந்த பேரவை அறிக்கையில் அறிக்கையில் எழுதி வைத்துள்ளீர்கள்.
இது நமது அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கிற முக்கியமான அம்சம் ஆகும். ‘தமிழ்நாடு வங்கி’ உருவாக்கப்பட வேண்டும் என இங்கு தீர்மானம் நிறைவேற்றி உள்ளீர்கள். இது வரவேற்கப்பட வேண்டிய மிக முக்கியமான தீர்மானமாகும். இந்தியாவிலேயே மாநில கூட்டுறவு வங்கிகளை இணைத்து கேரள அரசு ‘கேரள வங்கி’யை உருவாக்கி உள்ளது. அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அந்த அரசு அமுல்படுத்தி வருகிறது. வெளிநாட்டு முதலீட்டுகளையும் அந்த வங்கி ஈர்த்து மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து வருகிறது. மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்குவதில் ஒன்றிய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளை இணைந்து தமிழ்நாடு வங்கியை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். தமிழ்நாடு அரசு இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post எளிய மக்களின் வாழ்வு மேம்பட தமிழ்நாடு வங்கி உருவாக்கப்பட வேண்டும் appeared first on Dinakaran.
