
குடியாத்தம், செப்.29: குடியாத்தம் அருகே விவசாயியிடம் ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான விஏஓ மற்றும் பெண் உதவியாளரை சஸ்பெண்ட் செய்து ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன்(38). கிராம நிர்வாக உதவியாளர் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தை சேர்ந்த தேன்மொழி(41). இந்நிலையில், குடியாத்தம் அடுத்த ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மேகநாதன் என்பவர் தனது நிலத்தை அளவீடு செய்து, பட்டா மாற்றி தரும்படி விஏஓ அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதன்படி, நிலத்தை அளவீடு செய்து பட்டா மாற்றி தருவதற்காக ₹10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என விஏஓ ஜெயமுருகன் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் தர விரும்பாத மேகநாதன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, போலீசார் அறிவுறுத்தலின்பேரில் நேற்று முன்தினம் விவசாயி மேகநாதன் ₹10 ஆயிரத்தை விஏஓ ஜெயமுருகனிடம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். பின்னர், இதுகுறித்து வழக்கு பதிந்து விஏஓ ஜெயமுருகன் மற்றும் அவரது உதவியாளர் தேன்மொழி ஆகியோரை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், வேலூர் கலெக்டர் குமரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில், விஏஓ ஜெயமுருகன், உதவியாளர் தேன்மொழி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து குடியாத்தம் ஆர்டிஓ வெங்கட்ராமன் நேற்று ஆணை பிறப்பித்தார். இதனை சிறையில் உள்ள ஜெயமுருகன், தேன்மொழி ஆகியோரிடம் அதிகாரிகள் இன்று வழங்க உள்ளனர்.
The post விஏஓ, பெண் உதவியாளர் சஸ்பெண்ட் குடியாத்தம் ஆர்டிஓ உத்தரவு ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான appeared first on Dinakaran.