ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் மனு: சிறப்பு நீதிமன்றத்தை அணுக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை நாடுமாறு நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் பாஜ நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே. சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, ஆர்.கே.சுரேசுக்கு சொந்தமான வங்கி கணக்கு முடக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.சுரேஷ் சார்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, ஆருத்ரா மோசடி விவகாரத்திற்கும் மனுதாரருக்கும் எந்த தொடர்புமில்லை. வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் அவர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளார் என்று வாதிட்டார். காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கு முடக்கம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து, வங்கி கணக்கு முடக்கம் தொடர்பாக தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை நாடுமாறு ஆர்.கே.சுரேஷ்க்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

The post ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் மனு: சிறப்பு நீதிமன்றத்தை அணுக ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: