சாயா நாடி 4

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

சாயா கிரகத்தில் கேதுவை அடிப்படையாகக் கொண்டு பலன்களை அறியலாம். கேது என்பது எப்போதும் ஞானத்தையும் விரக்தியையும் கொடுக்கும் கிரகம். ஞானத்தை தேடுபவனுக்கு விரக்தி ஏற்படாது. இன்பத்தை தேடுபவனுக்கு கேது ஏமாற்றத்தை அளிப்பார் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. கிரகங்களின் மீது கேது பயணிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் வித்தியாசமானது.

ராகுவை போல் அல்லாமல் கொஞ்சம் ஒளித்தன்மையை கொண்டுள்ள கிரகம் கேது. கர்மா இல்லாத கிரகம் ஆதலால் சனியுடன் சேரும் போது ஒரு மனிதன் சித்தத் தன்மை அடைகிறான். மனதில் எழுகின்ற சித்தத்தை சிந்தனை செய்து சிந்தத்தை சித்தத்தால் சிந்திக்க வைத்து சித்தத்தையே சிதறடிக்கும் சக்தி கேது என்றால் கேது மட்டுமே. கேது கெடுத்து கொடுப்பான் என்பது பழமொழி. கிடைப்பதையெல்லாம் கெடுத்து ஞானத்தை கிடைக்கச் செய்வான் என்பதே கேதுவின் சிறப்புத்தன்மை.

கேது கெடுப்பது என்பது மிகுந்த தேடலுக்காகத்தான். ஆனால், மனிதம் மனம் சில நேரங்களில் விரக்தியை நோக்கி சென்றுவிடும் என்பதால் கேதுவின் மீது அச்சம் கலந்த பயம் உண்டு. கேது எந்த கிரகத்துடன் தொடர்பில் இருக்கிறானோ அது தொடர்பான ஆவலை குறைக்கச் செய்துவிடுவான். கோட்சாரத்தில் கேது மற்ற கிரகங்கள் மீது பயணிக்கும் பட்சத்தில் ஏற்படும் மாற்றத்தை காண்போம்.

கிரகங்களின் மீது கேது பயணிக்கும் பலன்கள்…

சூரியன் மீது கேது பயணிக்கும் காலத்தில் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. ஆன்மீகத் தொடர்பு ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதற்கான குரு அமைவார். சந்திரன் மீது கேது பயணிக்கும் காலத்தில் தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. ஆன்மீகத்தை மனம் விரும்பும். அதிக நாட்டத்தை ஏற்படுத்தும். கங்கை, யமுனை, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

ஏழை எளியோருக்கு தான தருமங்கள் செய்ய முற்படுவீர்கள். சில சமயங்களில் உடலில் அரிப்புகள், கட்டிகள் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. மனம் விரக்தி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. செவ்வாய் மீது கேது பயணிக்கும் காலத்தில் ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சிகள் ஏற்படலாம். செவ்வாயின் காரகமான சகோதரனுக்கோ பெண்களாக இருந்தால் கணவனுக்கோ மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். கணவனுடன் கருத்து வேறுபாடுகள் அல்லது சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.

புதன் மீது கேது பயணிக்கும் காலத்தில், நிலம் தொடர்பான பிரச்னைகள் உருவாகும். அதில் சில நில ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகள் இருக்கும். சிலருக்கு படிப்புக்கும் தடை ஏற்படலாம். தரகு வேலை செய்வோருக்கு, உதாரணமாக, நில விற்பனை செய்வோர்களுக்கு பிரச்னைகள் ஏற்படலாம். சிலருக்கு நண்பர்களுடன் கருத்து வேறுபாடு மற்றும் மனஸ்தாபம் ஏற்படலாம்.

வியாழன் மீது கேது பயணிக்கும் காலத்தில், பொருளாதாரப் பிரச்னைகள் சிலருக்கு கடன் தவணைகளை செலுத்துவதில் தடை ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு கொப்புளங்கள், காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. வீட்டில் நடைபெறும் சுபகாரியங்கள் தள்ளிப்போக வாய்ப்புகள் அதிகம்.

சுக்கிரன் மீது கேது பயணிக்கும் காலத்தில், கிரகத்தின் காரகத்துவங்களான மனைவி, சகோதரிக்கு உடல் சுகவீனம் அடைவதற்கான வாய்ப்புண்டு. மனைவியுடன் கருத்து வேறுபாடு, பிரிவு ஏற்படலாம். கொடுத்த பணம் வருவதில் தடை ஏற்படலாம்.

சனி மீது கேது பயணிக்கும் காலத்தில், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும். சித்தர்களின் தொடர்போ பெரிய ஆன்மீகவாதிகளின் தொடர்பு மற்றும் ஆசிகள் கிடைக்கப் பெறுவர். சிலருக்கு தொழிலில் தடை ஏற்படலாம். உத்யோகத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலர் புனித இடங்களுக்கான தீர்த்த யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரலாம்.

ராகு மீது கேது பயணிக்கும் காலத்தில் அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். வாழ்வில் பெரிய மாற்றங்கள் உண்டாகும். வீட்டில் உள்ள முதியோர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்வது அவசியம். அவர்களின் ஆசி நம்மை வளம் பெறச் செய்யும்.

சாயா கிரகங்களில் கேதுவால் உண்டாகும் தோஷத்திற்கான பரிகாரங்கள் என்ன?

சூரியனுடன் கேது இணைந்திருந்தால், ஞாயிறு அன்று விநாயகருக்கு ஏழு குடங்கள் நீர் ஊற்றி அபிஷேகம் செய்து அறுகம்புல் மாலை கொடுத்து அர்ச்சனை செய்து கொள்ளும் போது சூரியன்-கேது இணைவால் ஏற்படும் பிரச்னைகள் குறைந்து சுபிட்சம் உண்டாகும். நாகாபரணம் சூடிய சிவபெருமானையும் அன்று வழிபட்டு கொள்ள வேண்டும்.

சந்திரனுடன் கேது இணைந்திருந்தால், திங்கட் கிழமை அன்று பெளர்ணமி நாளாக இருந்தால் இன்னும் சிறப்பு. அன்று நாகங்களை தலை சூடிய அம்பாளுக்கு அபிஷேகம் செய்வித்து அர்ச்சனை செய்து கொண்டால் சிறப்பான பலன்கள் உண்டாகும். செவ்வாயுடன் கேது இணைந்திருந்தால், நாக சுப்ரமணியரை வழிபடலாம் அல்லது சீரடி சாய்பாபாவை வழிபடுவது சிறப்பானதாகும்.

புதனுடன் கேது இணைந்திருந்தால், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள காளிங்கநர்த்தனரை புதன் கிழமை அன்று வழிபடுதல் சிறப்பான பலன்கள் உண்டாக்கும். வியாழனுடன் கேது இணைந்திருந்தால், நாகாபரணம் சூடிய சிவபெருமானை வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பானதாகும்.

சுக்கிரனுடன் கேது இணைந்திருந்தால், கருமாரியம்மனை அல்லது நாகங்களை சூடிய அம்பாளை வெள்ளிக்கிழமை அன்று பூக்கள் கொடுத்து வழிபடுவது சிறப்பானதாகும். குறிப்பாக அரளி பூ கொடுத்து வழிபடுதல் சிறப்பானதாகும். சனியுடன் கேது இணைந்திருந்தால், சித்தர் சமாதியான ஸ்தலத்திற்கு சென்று வழிபட்டு பின்பு, சிறிது நேரம் அமைதியாக சித்தரை தியானித்து உங்கள் பிரார்த்தனையை அங்கு வையுங்கள்.

உங்களால் முடிந்த அளவு ஏழ்மையில் உள்ள சாமியார்களுக்கு உணவு தானம் செய்யுங்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் கிரக இணைவிற்கான பரிகாரங்கள் மட்டுமே. ஒவ்வொருவருக்கும் அவர்களின் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

சாயா கிரக நாடி முற்றும்!

The post சாயா நாடி 4 appeared first on Dinakaran.

Related Stories: