கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!

நன்றி குங்குமம் டாக்டர்

முகவாதம் தெரியுமா?

காயத்ரிக்கு 22 வயது. தன் இடது புற முகத்தைக் காட்டி, ‘இந்தக் கண்ணில் வலிக்கிறது, வாய் கோணலாகச் செல்கிறது, ஒரு பக்கம் முழுவதும் பாரமாக இருக்கிறது, சரியாக சாப்பிட முடியவில்லை’ என்று கூறினார். ஆனால் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருடைய பிரச்சனை இடது புறத்தில் அல்ல, முழுக்க முழுக்க முகத்தின் வலது புறத்தில் என்று கண்டுபிடிக்க முடிந்தது.

முகத்தில் மூளை நரம்புகளின் பணியைக் கணிப்பதற்காக, சில செயல்களைச் செய்யுமாறு அவரை அறிவுறுத்தினேன். கண்ணை இறுக்கமாக மூடுங்கள் என்று கூறினால் அவரால் வலது புறக் கண்ணை சரியாக மூட முடியவில்லை. நெற்றியை மேலாக சுருக்கச் சொன்னால், இடது புறப் புருவம் மேலே உயர்ந்து இடது பாதி நெற்றியில் சுருக்கங்கள் தெரிகிறது, வலது புற நெற்றியில் சுருக்கங்கள் இல்லை. வாயில் ‘உஃப்’ என்று காற்றைப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினால் வலது புறத்தில் அவரால் காற்றைப் பிடித்து நிறுத்த முடியவில்லை, வெளியேறுகிறது. ‘ஈ’ என்று சொல்லுங்கள் என்கையில் வலது புறம் வாய் அதே நிலையில் இருக்க, இடது வாய் கோணலாக இருக்கிறது.

அவருக்கு ஏற்பட்டிருந்தது பெல்’ஸ் பேல்சி (Bell’s palsy) என்று அழைக்கப்படும் முகவாதம் என்பது தெரிந்தது. நம் மூளையில் இருந்து முக்கிய வேலைகளை செய்யத்தக்கதாக 12 நரம்புகள் (cranial nerves) புறப்படுகின்றன. இவை பெரும்பாலும் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தங்கள் பணியை செவ்வனே செய்கின்றன. அதில் ஒன்று ஏழாவது நரம்பு என்று அழைக்கப்படும் ஃபேசியல் நரம்பு. இந்த ஏழாவது நரம்பானது காதிற்கு சற்று பின்னே மூளையிலிருந்து வெளியேறி, எச்சிலை சுரக்கும் முக்கிய சுரப்பியான பரோட்டிட் சுரப்பியின் ஊடாக ஐந்து பிரிவுகளாகப் பிரிந்து முகத்தின் ஒரு பாதியில் முக்கியமான பணிகளை செய்ய உதவும்.

மேலே கூறிய கண்களை மூடுதல், உணவை மெல்லுதல், நெற்றியை சுருக்குதல் போன்ற பணிகளைச் செய்வது இந்த நரம்பு தான். இந்த நரம்பு காதுக்கு வெகு அருகே பயணிப்பதால் குளிர் காற்றில் பயணம் செய்பவர்கள், இரவில் மொட்டை மாடியில் படுப்பவர்கள், குளிர்ந்த நீரில் குளித்தவர்கள் இவர்களுக்கு எளிதாக பாதிக்கப்படும். தட்பவெப்ப சூழ்நிலை திடீரென்று மாறுவதால் நரம்பில் ஒரு வித அழுத்தம் (neuropraxia) ஏற்படுகிறது.

பாதிக்கப்பட்டவருக்கு முகத்தின் ஒரு பாதி செயலிழந்திருப்பதால், இன்னொரு பகுதி அதிகமாக வேலை செய்வது போல ஒரு தோற்றம் ஏற்படும். அதனால் தான் காயத்ரி வலதுபுற பாதிப்பை இடது புற பாதிப்பாகக் கற்பனை செய்து கொண்டார். வலது கண் இமையை சரியாக மூடித் திறக்க முடியாததால் இடது கண் மட்டுமே அதிகம் வேலை செய்வது போல் அவருக்குத் தோன்றியிருக்கிறது. முக வாதத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் பாதிக்கப்பட்ட பகுதியை விட்டுவிட்டு அடுத்த பகுதியைச் சுட்டிக்காட்டி ‘வாய் கோணி இருக்கிறது’ என்ற அறிகுறியைத் தான் முதலில் சொல்வார்கள்.

கண்களை சரியாக மூடித் திறக்க முடியாததால் வேறு சில பிரச்சனைகளும் உண்டு. கண்களில் எப்பொழுது சுரக்கும் கண்ணீரானது இமையில் இருக்கும் இரண்டு சிறிய துளைகளின் வழியே வெளியேறி சிறு குழாய் மூலமாக மூக்கின் பின்புறத்தில் நுழைந்து எச்சில் நீருடன் கலந்து விடுகிறது என்பதை ஏற்கனவே இந்தக் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டிருக்கிறோம். கண்ணீரை இந்த சிறுதுளை வழியாக அனுப்புவதற்கு முக்கிய காரணம் இமைகள் மூடியும், திறந்தும் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்வது தான். நரம்பு பாதிப்பினால் இந்த வேலை தடைபடும் பொழுது கண்களில் சுரக்கும் நீர் வெளிப்புறமாக வடிந்து விடும். பாதிக்கப்பட்ட கண்ணில் ‘நிறைய கண்ணீர் வருகிறது’ என்று நோயாளி சொல்வார்.

கூடவே பாதி திறந்திருக்கும் இமையின் வழியே தூசிகள் எளிதாக உள்ளே சென்று கண்களை தாக்கக் கூடும். உறங்கும் நேரத்தில் கண்ணைப் பாதி திறந்தே வைத்திருப்பதால் கண்ணீர் உலர்ந்து போய் கருவிழி புண்படவும் வாய்ப்பிருக்கிறது. காயத்ரிக்கு இந்தப் பிரச்சனை வரக் காரணம் என்ன என்று யோசித்த போது அவர் அதிகாலையில் பேருந்தில் பயணம் செய்தார், கூடவே லேசாக சளி பிடித்திருந்தது என்பதும் தெரிந்தது. ஓய்வின்றி உழைப்பவர்கள், அதிகம் பயணம் செய்பவர்கள், சிலவகை மனச்சோர்வு நோயாளிகள், இவர்களுக்கும் இந்த பிரச்சனை அடிக்கடி ஏற்படுவதைப் பார்க்க முடியும்.

காயத்ரிக்கு ஏற்பட்டது பெல்’ஸ் பால்சி. இது சிலருக்கு எந்த வகைக் காரணங்களும் இல்லாமல் தானாகவே (idiopathic) ஏற்படலாம். விரைந்து சிகிச்சை அளித்தால் முழுவதுமாக சரியாகிவிடக் கூடிய பிரச்சனை இது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாளில் மீண்டும் ஒரு முறை அதே பக்கத்தில் முகவாதம் ஏற்படவும் வாய்ப்பு அதிகம். அதேபோல் வலது புற முகத்தில் ஒரு முறை முக வாதம் ஏற்பட்ட நபருக்கு பின்னாளில் இடது புற முகத்திலும் முகவாதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அதனால் ஆறுகளில், குளங்களில் குளிக்கும் போதும், வாகனங்களில் பயணம் செய்யும்பொழுதும் காதில் பஞ்சு வைத்துக் கொண்டால் நல்லது. சில வகை மூளை நரம்பியல் பிரச்சனைகள், தொழுநோய் உள்ளிட்ட தொற்றுகள், காது மற்றும் பரோட்டிட் சுரப்பி பகுதியில் நடைபெறும் அறுவை சிகிச்சைகள் இவற்றிற்கு பின்பாகவும் ஏழாவது நரம்பு பாதிக்கப்பட்டு முக வாதம் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலைகளில் உரிய காரணத்தைக் கண்டுணர்ந்து அதற்கான சிகிச்சை அளித்தால் போதுமானது.

இன்னொரு நண்பர். மளிகைக் கடை நடத்துபவர். இவருக்கு கொரோனா காலத்தில் நோய் தொற்று ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டார். முதலில் கொரோனாவால் நுரையீரல் தொற்று, அதிலிருந்து மீண்டு வீட்டுக்கு வந்த ஓரிரு நாட்களில் கருப்புப் பூஞ்சைத் தொற்று என்று நீண்ட நாட்களாக மருத்துவமனையில் வாசம் செய்ய நேர்ந்தது. கருப்புப் பூஞ்சைத் தொற்றுக்காக இரண்டு முறை அவரது மூக்குப் பகுதியில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து சிகிச்சைகளும் முடித்து வீட்டிற்கு வந்தவர், ஒரு மாதம் கழித்து இடது கண்ணில் சிவப்பு, நீர் வடிதல், புண் ஆகியவை ஏற்பட்டிருக்கிறது என்றார்.

அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து முகக் கவசமும் அணிந்திருந்த காலம் அது. முகக்கவசத்தின் ஊடாக அவர் பேசுகையில் சற்று வித்தியாசம் தெரிந்தது. முகக்கவசத்தை கழற்றுங்கள் என்று கூறியவுடன் அதிர்ந்து போனேன். ஏனெனில் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்ட முந்தைய மூன்று மாதங்களில் எப்பொழுதோ அவருக்கு முக வாதம் ஏற்பட்டிருக்கிறது. கருப்புப் பூஞ்சை, கொரோனா தொற்றுகளால் ஏற்பட்ட பின் விளைவாகவோ, மூக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் பின் விளைவாகவோ இது விளைந்திருக்கலாம். சமூக இடைவெளியும் முகக் கவசமும் எத்தனையோ பேர்களின் வாழ்வைக் காப்பாற்றி இருக்கிறது.

ஆனால் மளிகைக் கடைக்காரர் தொடர்ச்சியாக முகக் கவசம் அணிந்திருந்ததால் உறவினர், மருத்துவர் உள்ளிட்ட எவரின் பார்வைக்கும் சிக்காமல் இந்த முகவாதப் பிரச்சனை தப்பிப் போய்விட்டது. அவரும் இடதுபுற முகத்தில் ஏற்பட்ட அசௌகரியத்தை கருப்பு பூஞ்சையின் பாதிப்பாக நினைத்து விட்டார்.மருத்துவப் பரிசோதனைகளின் படி பார்த்தால் முகவாதம் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகி இருக்கலாம்.

பொதுவாக எந்த ஒரு நரம்பியல் பிரச்சனைக்கும் அதிகபட்சமாக முதல் 40 நாட்களுக்குள் சிகிச்சையை ஆரம்பித்தால் தான் விளைவுகள் திருப்திகரமாக இருக்கும். இருந்தும் முகவாதத்திற்கு அளிக்கப்படும் சிகிச்சைகளான ஸ்டீராயிட் மருந்துகள், பிசியோதெரபி ஆகியவற்றை ஆரம்பித்தோம். பிசியோதெரபியில் நரம்புகளை தூண்டும் விதமாக galvanic stimulation வழங்கப்படும். இமைகள் மூடாமல் கண்கள் வெகுவாகத் திறந்திருந்தது. அதனால் கண்ணை ஒரு பிளாஸ்டரால் ஒட்டி விட்டு பாதுகாப்பிற்காக ஒரு கண்ணாடியையும் அணிவித்தேன். கருவிழியின் அடிப்பகுதி வெகு நாட்களாக உலர்ந்திருந்ததால் புண் ஏற்பட்டு (exposure keratitis), கிருமித் தொற்றும் ஏற்பட்டிருந்தது. அதைச் சரி செய்வதற்கான ஆன்டிபயாட்டிக் மற்றும் ஈரப்பசையை தரக்கூடிய lubricant மருந்துகளைப் பரிந்துரைத்தேன்.

தொடர்ந்து பிசியோதெரபி செய்தும் முகத்தின் அசைவுகளில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. அதனால் exposure keratitis பிரச்சனைக்கு செய்யப்படும் ஒரு சிகிச்சையான lateral tarsorrhapphy என்னும் சிறு அறுவை சிகிச்சையை அவருக்கு மேற்கொண்டேன். இந்த சிகிச்சையில் இயற்கையாக இமைகளை மூட முடியாத நோயாளிகளுக்கு பாதிக்கப்பட்ட கண்ணின் இமைகளை வெளி ஓரத்தில் ஓரிரு தையல்கள் மூலமாக இணைப்போம். அதனைத் தொடர்ந்து ஓரிரு மாதங்களில் கருவிழிப்புண் முழுமையாக ஆறிவிட்டது.

லேசாக கண்களை மூடினாலே ஓரத்தில் இருக்கும் தையலின் உதவியாய் முழு கண்ணும் நன்றாக மூடிக்கொண்டது. சமீபத்தில் அவரை ஒருநாள் கடைத்தெருவில் சந்திக்கையில் கண் பிரச்சனை குணமாகிவிட்டது, ஆனால் இன்னும் பேசுவதில், உண்பதில் உள்ள தொந்தரவுகள் இன்னும் இருக்கின்றன என்றார். ஏற்கனவே அவருக்கு அறிவுறுத்தியிருந்த பலூன் ஊதுதல், பபிள் கம் மெல்லுதல், அடிக்கடி தண்ணீரால் வாய் கொப்பளித்தல் போன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தினேன். முக வாதத்தைத் தாமதமாக அறிந்து கொண்டாலும் முறையாக சிகிச்சை பெற்று ஒரு கண் நிரந்தரமாகப் பார்வையிழப்பதைத் தவித்து விட்டார் என்றதில் பெரும் நிம்மதி எனக்கு ஏற்பட்டது. Better late than never என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்!

The post கண்ணைக் கட்டிக் கொள்ளாதே! appeared first on Dinakaran.