மனிதன் உயிர்வாழ அடிப்படைக் காரணிகளாக அமைவது உணவு, உடை, இருப்பிடம். இவற்றில் முக்கியமாக உணவினை நாம் சரியாக தேர்ந்தெடுத்து உட்கொள்கிறோமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆடம்பர வாழ்க்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவுமுறைக்கு கொடுக்க தவறுகிறோம். என்பது உண்மையே. குறிப்பாக, குறைந்த விலையில் கிடைக்கும் அதிக ஊட்டச்சத்து கொண்ட கீரை வகைகளை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் சிறந்த உடல் வலிமையை பெறலாம்.கீரைகளில் பல்வேறு வகையான கீரைகள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்கப் பெறும் காசினிக்கீரை அதிக சத்துகளை உள்ளடக்கியதாகவும் மருத்துவப் பண்புகளைக் கொண்டதாகவும் திகழ்கின்றது.
காசினிக் கீரையை நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது முன்னோர்கள் பயன்படுத்தி வருவதாகவும். சீனர்கள் காசினிக் கீரையை கல்லீரல் நோயைக் குணப்படுத்துவதற்காக பயன்படுத்தியதாகவும் ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன. காசினிக் கீரைகளில் பல வகைகள் உள்ளன. அவை, கொம்புக் காசினி, சீமைக் காசினி, வேர்க் காசினி மற்றும் சாலடு காசினி கீரைக்கு கானாம் கோழிக் கீரை என்ற வேறு பெயரும் உண்டு. இவை குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களில் பயிரிடப்படும் கீரையாகும்.
இந்தியா, துருக்கி, ஆப்கானிஸ்தான், சீனா, தென் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் காசினிக் கீரை பயிரிடப்படுகிறது.
உலகளவில் இந்தியா காசினிக்கீரையை பயிரிடுவதில் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக மலைப்பிரதேசங்களான கொடைக்கானல், ஏற்காடு மற்றும் சேர்வராயன் மலைப் பகுதிகளில் அதிகளவு பயிரிடப்படுகிறது.
காசினிக்கீரை பல வகைப்பட்ட மண் வகைகளில் வளரக்கூடியதாக இருந்தாலும், செம்மண் நிறைந்த இடங்களில் சிறந்து வளர்கிறது. காசினிக்கீரையை பார்ப்பதற்கு முள்ளங்கி கீரையை போன்றே இருக்கும்.காசினிக்கீரையின் தாவரவியல் பெயர்: சின்கோரியம் இன்டிபஸ். காசினிக்கீரையின் இலை மற்றும் வேர்ப்பகுதிகள் மருத்துவ பண்பு கொண்டவையாக உள்ளது. காசினிக்கீரையின் வேர்ப்பகுதியில் கிடைக்கப் பெறும் சிக்கரி காப்பி பவுடர் தயாரிப்பதற்கு உதவுகிறது. இது 20 செ.மீ முதல் 150 செ.மீ. உயரம் வரை வளரக்கூடிய கீரையாகும்.
காசினிக்கீரையில் காணப்படும் சத்துகள்:
காசினிக்கீரையில், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி உள்ளதால் மிகுந்த சத்துகளின் கீரையாக திகழ்கிறது.
காசினிக்கீரையின் மருத்துவ பண்புகள்:
தேவையற்ற கொழுப்புகளை நீக்கி இதயத்தை பாதுகாக்கிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற நீரை அகற்றி உடல் பருமனை குறைக்கிறது. கால்சியம் நிறைந்து காணப்படுவதனால் பற்களின் உறுதியை மேம்படுத்தி பாதுகாக்கிறது. உடலில் அதிகமாக உற்பத்தியாகும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி உடல்வலியைப் போக்குகிறது. பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்கிறது.
பித்தப்பை கோளாறு, கல்லீரல் பிரச்னை, சிறுநீரகக் கல் பிரச்னை போன்றவற்றை குறைக்கவும் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் காசினிக் கீரை பொடியை காலைநேரத்தில் குடித்துவந்தால், நீரிழிவு கட்டுப்படும். அல்லது இந்த பொடியுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நீரிழிவை கட்டுப்படுத்தலாம்.
காயங்களை ஆற்றக்கூடிய சக்தி இந்த காசினிக்கு உண்டு. குறிப்பாக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் வந்தால், இந்த கீரையை அரைத்து புண்களின் மீது பற்று போட்டு கட்டினால், சீக்கிரமாகவே குணமாகிவிடும். உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் குணம் கொண்டது காசினி கீரை. எவ்வளவு மோசமான புண்கள் இருந்தாலும், அதை காசினி குணப்படுத்திவிடும். அல்லது இந்த கீரையின் சாறினை, புண்களின் மீது தடவினாலும், புண்கள் விரைவில் ஆறிவிடும்.
காசினிக் கீரையில் காணப்படும் தாவர வேதிப் பொருட்கள்:
இனுலின், லாக்டுசின், குமாரின், சாப்போனின், டானின், பிளேவோனாய்டுகள் மற்றும் ஆல்கலாய்டுகள் செறிந்து காணப்படுகின்றன. இதன் மருந்து பண்புகளுக்கு இதில் காணப்படும் இனுலின் காரணமாக உள்ளது.காசினிக்கீரையின் மருத்துவ குணங்களை பதார்த்த குணபாடத்தில், கீழ்க்கண்டவாறு கூறப்படுகிறது.
அத்திவெப்பம் நீக்கு மடர்சோபை யைத்தொலைக்கு
மெத்த வுதிரத்தழுக்கை விலக்கு – மத்தரத்தின்
மாசினியி லைங்காத வார்த்தையெனப் பேசுவிக்குங்
காசினி யிலைக்குணத்தைக் காண்
காசினிக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து பொரியலாகவும் மணப்பாகு செய்தும், சூப்பாகவும் செய்து உட்கொள்ளலாம். இதன் அதிக மருத்துவக் குணங்களின் காரணமாக கடவுளின் வரம் எனவும் இக்கீரை அழைக்கப்படுகிறது.
The post காசினிக் கீரை பயன்கள்! appeared first on Dinakaran.