முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

கிருஷ்ணகிரி, செப்.25: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (25ம்தேதி) நடைபெறும் நிகழ்ச்சிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று (25ம் தேதி) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதனையொட்டி விழா முன்னேற்பாடு பணிகளை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் சரயு, எம்எல்ஏக்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அமைச்சர் கூறியதாவது:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (25ம் தேதி) சூளகிரி ஒன்றியம் சென்னப்பள்ளி ஊராட்சியில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக ₹28 கோடியே 81 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் காய்கறி முதன்மை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு கட்டுமான பணிகளையும், மருதாண்டப்பள்ளி சூளகிரி சிப்காட் வளாகத்தில் நவீன மின்வாகன பூங்கா அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து குந்தாரப்பள்ளி குமரன் திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஏடிஎம் கார்டு மற்றும் கையேடுகளை வழங்கவுள்ளார்.

பின்னர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், வாழ்ந்துகாட்டுவோம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பழங்குடியினர் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் சாதிச்சான்றிதழ்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார். மேலும், அனைத்து துறைகள் சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, தாசில்தார் விஜயகுமார், தனி தாசில்தார் சம்பத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: