தர்மபுரி, செப்.25: தர்மபுரி மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர்கள் தடங்கம் சுப்ரமணி, பழனியப்பன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்திற்கு இன்று (25ம் தேதி) மாலை வருகை தரும் திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு, மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலை 7 மணிக்கு காரிமங்கலத்தில், அவர் திமுக கொடி ஏற்றி வைக்கிறார். இரவு தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை (26ம் தேதி) காலை 10.30 மணிக்கு, காரிமங்கலம் கெரகோடஅள்ளியில் திமுக இளைஞர் அணி செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் 12 மணிக்கு, செட்டிக்கரையில் கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார்.
தர்மபுரி வட்டார வளர்ச்சி காலனி, புரோக்கர் ஆபீஸ் அருகில் 60அடி உயர கொடி கம்பத்தில், திமுக கொடியை ஏற்றி வைக்கிறார். மதியம் 1.15 மணிக்கு இலக்கியம்பட்டியில் கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார். 1.40 மணிக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை பயனாளிகளுக்கு, ஏடிஎம் கார்டுகளை வழங்குகிறார். பிற்பகல் 2.15 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் மாளிகையில் மதிய உணவு சாப்பிடுகிறார். மாலை 3.45 மணிக்கு, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் சிறுதானிய திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.
மாலை 5.30 மணிக்கு தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான சிறப்புதிட்ட செயலக்கத்துறை ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு தர்மபுரி -பென்னாகரம் மெயின்ரோடு ஜோதி மஹாலில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். எனவே, இந்நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பெருந்திரளான இளைஞர்கள் கலந்து கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தர்மபுரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் appeared first on Dinakaran.