பின்னர் முதல்வர் அவினாசி ரோடு சின்னியம்பாளையத்தில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் விளாங்குறிச்சி பகுதிக்கு காரில் சென்றார். அங்கு மாநகராட்சி 8-வது வார்டு துளசிநகரில் 2023-24க்கான மாநில நிதி குழு நிதியின் கீழ் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 2.04 கிமீ நீளத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பணிகள் கடந்த 5ம் தேதி துவங்கப்பட்டு தற்போது நிறைவுறும் நிலையில் உள்ளது. தொடர்ந்து, 5-வது வார்டு நஞ்சப்பா நகரில் உள்ள விகேவி நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 2.21 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியையும் முதல்வர் ஆய்வு செய்தார்.
விகேவி நகரில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு அப்பகுதி மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். அனைத்து பணிகளையும் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் எனவும், நகராட்சி நிர்வாகத்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள், போக்குவரத்து, காவல்துறை, மின்வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், தொலைதொடர்புத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, சாலைப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அலுவலர்களிடம் முதல்வர் அறிவுறுத்தினார்.
*ரூ.1000 உரிமைத்தொகைக்கு நன்றி கூறிய பெண்கள்
சாலை பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தபோது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது முதல்வர், “உங்களுக்கெல்லாம் ரூ.1000 உரிமைத் தொகை கிடைத்ததா?” என்று கேட்டார். அதற்கு ஒரு பெண் ‘‘ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை எனக்கு தபாலில் வந்துவிட்டது. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நன்றி ஐயா’’ என்றார்.
மற்றொரு பெண், ‘‘எனக்கு முதல்நாளிலேயே வந்துவிட்டது’’ என தெரிவித்தார். இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘யாருக்கெல்லாம் இன்னும் உரிமை தொகை கிடைக்கவில்லையோ, அவர்கள் மீண்டும் மனு செய்யுங்கள்’’ என கூறினார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், ‘‘விகேவி நகரில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தார் சாலை பணிகள் நடக்கிறது. இதற்கு மிகவும் நன்றி’’ என தெரிவித்தார்.
The post கோவையில் சாலை பணி முதல்வர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.