போக்குவரத்திற்கு இடையூறாக திரிந்த மாடுகள் பறிமுதல்

சாயல்குடி,செப்.24: முதுகுளத்தூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும்படி சுற்றி திரிந்த 5 மாடுகளை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் பிடித்து கட்டியுள்ளனர். முதுகுளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்கள், அனைத்து கடைகள், மருத்துவமணை உள்ளிட்டவை இருப்பதால் சுற்று வட்டார கிராமமக்கள் நாள் தோறும் வந்து செல்கின்றனர்.

மேலும் இந்த வழித்தடத்தில் பல்வேறு வெளியூர் வாகனங்களும் வந்து செல்வதால் போக்குவரத்து மிகுந்த நகராக விளங்கி வருகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை என்பதால் வழக்கத்தை விட பெண்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் மாடுகளை அதன் உரிமையாளர்கள் கட்டி போடுவதில்லை.

இதனால் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிவதால் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தது. இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானது. தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மைக்செட் மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்தும் மாடுகளை கட்டிபோடாமல், சாலையில் சுற்றி திரிந்ததால் 5 மாடுகளை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் பிடித்து சந்தை பேட்டையில் கட்டிப் போட்டுள்ளனர்.

The post போக்குவரத்திற்கு இடையூறாக திரிந்த மாடுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: