கூன் முதுகு உடைய 74 வயது முதியவருக்கு சிக்கலான கண் புரை அறுவை சிகிச்சை: பூந்தமல்லி அரவிந்த் கண் மருத்துவமனை சாதனை

பூந்தமல்லி: தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன்(74). முதியவரான இவருக்கு இரண்டு கண்களிலும் கடுமையான கண்புரை நோய் இருந்துள்ளது. மேலும் இவரது கழுத்துடன் சேர்ந்த முதுகெலும்பு கிட்டத்தட்ட 90 டிகிரி அளவில் வளைந்துள்ளது. கூன் முதுகு காரணமாகவும், முதுகெலும்பு பிரச்னை காரணமாகவும் இவர் தரையைப் பார்த்தவாறுதான் நடந்து செல்ல முடியும். அத்துடன் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளது. மற்றவர்களைப் போல கழுத்தை தேவைப்படும் அளவுக்கு திருப்ப இயலாத நிலையில் அவர் இருந்து வந்தார். இப்படிப்பட்டவருக்கு மிக மோசமான சிக்கலான கண்புரை நோய் இருந்தது.

இந்த அரிதான மற்றும் சிக்கலான கண்புரை அறுவை சிகிச்சை செய்வதற்கு பல கண் மருத்துவர்களை இவரது குடும்பத்தினர் அணுகி உள்ளனர். ஆனால் இந்த அறுவை சிகிச்சையில் உள்ள சிக்கலான நிலையை அறிந்தும், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டும் கண் மருத்துவர்கள் பலரும் சிகிச்சை செய்ய மறுத்து விட்டனர். இந்த நிலையில் பூந்தமல்லியில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் அரவிந்த் சீனிவாசன் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையின் சீனியர் கண் சிகிச்சை நிபுணரான ஹரிப்பிரியா அரவிந்த் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இவருக்கு அந்த சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

இது குறித்து ஹரிப்பிரியா அரவிந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சராசரி மனிதர்களைப் போல இல்லாமல் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட கழுத்து இயக்கத்துடன் 90 டிகிரி வளைந்த முதுகெலும்புள்ள 74 வயதான முதியவருக்கு இரண்டு கண்களிலும் கண்புரை இருந்துள்ளது. இவரால் மற்றவர்களைப் போல கழுத்துப் பகுதியை திருப்பவோ, நிமிர்ந்து பார்க்கவோ இயலாது. அதனால் இவருக்கு கண் வீக்கமும் இருந்துள்ளது. மற்றவர்களைப் போல நுரையீரல் தன்மையும் இல்லாததால் நுரையீரல் பாதிப்பும் இருந்தது‌. மிகவும் சவாலான இந்த அறுவை சிகிச்சையை அரவிந்த் கண் மருத்துவமனை நிபுணர்கள் குழு வெற்றிகரமாக செய்துள்ளது.

சிகிச்சைக்கு முன்பு அவரது உடல்நிலை, நோயின் தன்மை, அவருக்கு ஏற்பட்டுள்ள முதுகு கழுத்து எலும்பு பிரச்சனை, நுரையீரல் பாதிப்பு, அவருடைய தாங்கும் திறன் இப்படி அனைத்து வகையான நுட்பங்களையும் ஆராய்ந்தோம். அதன் பிறகே அறுவை சிகிச்சை செய்தோம். இதற்காக நோயாளியின் கீழ் உடலையும் கீழ் முதுகையும் சுமார் 60 டிகிரி அளவுக்கு உயர்த்தும் வகையில் விசேஷமான முறையில் வடிவமைக்கப்பட்ட படுக்கை வசதி ஏற்படுத்தி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு முன்பாக நோயாளிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்யப்படும் கண் பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மூன்று மாத இடைவெளியில் இரண்டாவது கண்ணுக்கும் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நல்ல பார்வையுடன் இயல்பாக இருக்கிறார். பலராலும் செய்ய முடியாது என்று கைவிடப்பட்ட நிலையில் மிகச் சவாலான இந்த கண்புரை அறுவை சிகிச்சையை அரவிந்த் கண் மருத்துவமனை முதல் முறையாக வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

The post கூன் முதுகு உடைய 74 வயது முதியவருக்கு சிக்கலான கண் புரை அறுவை சிகிச்சை: பூந்தமல்லி அரவிந்த் கண் மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.

Related Stories: