கலெக்டர் நேரில் ஆய்வு கீழே கிடந்த 5 பவுன் நகை கண்டெடுப்பு உரியவரிடம் ஒப்படைத்த மெக்கானிக்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கீழே கிடந்த 5 பவுன் நகைகளை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த மெக்கானிக்கை போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர். தஞ்சாவூர் சிராஜ்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (45). இவர் தான் அடகு வைத்திருந்த 42 கிராம் நகைகளை மீட்டு பாக்கெட்டில் வைத்து கொண்டு தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்தார். அப்போது பாக்கெட்டை பார்த்தபோது நகைகளை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தார். அப்போது தஞ்சாவூர் மானம்புச்சாவடியை சேர்ந்த மெக்கானிக் காதர் (45) என்பவர் கீழே கிடந்த நகையை எடுத்தார். இது யாருடைய நகை என விசாரித்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த பிரபாகர் இது என்னுடைய நகை எனக்கூறினார். இருந்தாலும் நான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விடுகிறேன். நீங்கள் உரிய ஆவணங்களை காண்பித்து நகைகளை பெற்று செல்லுங்கள் என காதர் கூறினார்.

அதன் பேரில் காதர் தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் 42 கிராம் தங்க நகைகளை ஒப்படைத்தார். பிரபாகர் உரிய ஆவணங்களை காண்பித்ததை தொடர்ந்து காதர் முன்னிலையில் பிரபாகரிடம் போலீசார் 42 கிராம் தங்க நகைகளை ஒப்படைத்து கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தினர். கீழே கிடந்த நகையை பத்திரமாக எடுத்து அதனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மெக்கானிக் காதருக்கு சால்வை அணிவித்து போலீசார் பாராட்டினர்.‌ இதுகுறித்து காதர் கூறும்போது, அடுத்தவர்கள் பொருட்களுக்கு நாம் ஆசைப்படக்கூடாது.‌ கீழே நகை, பணம் என எந்த விலை மதிக்க முடியாத பொருட்கள் கிடந்தாலும் உடனடியாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். நேர்மையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தாலே மனதிற்கு நிம்மதி தான் என்றார். காதரின் இந்த மனித நேயமிக்க செயலை போலீசார் மட்டுமின்றி அனைவரும் மனதார பாராட்டினர்.

The post கலெக்டர் நேரில் ஆய்வு கீழே கிடந்த 5 பவுன் நகை கண்டெடுப்பு உரியவரிடம் ஒப்படைத்த மெக்கானிக் appeared first on Dinakaran.

Related Stories: