ராணுவ தடுப்புகளை அகற்ற முயற்சி மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்

இம்பால்: மணிப்பூரில் ஊரடங்கு அமலை மீறி தடுப்புக்களை அகற்ற முயன்றவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இதில் 25 பேர் காயமடைந்தனர். மணிப்பூரில் 2 சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதனையடுத்து அங்கு நாள்தோறும் போராட்டங்களும், மோதல்களும் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் அமைதியற்ற சூழல் நிலவியது. இதன் காரணமாக அவ்வப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் 5 பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிஷ்ணுபூர், கக்சிங், தவுபால், மேற்கு மற்றும் கிழக்கு இம்பால் மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.மணிப்பூர் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு குழுவானது, பள்ளத்தாக்கு மாவட்டங்களில் அனைத்து பகுதியிலும் உள்ள ராணுவ தடுப்புக்களை மக்கள் அகற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை முதல் 5 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவையும் மீறி, நேற்று காலை பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள பவுகாக்சோ இகாய் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, போலீசாரின் தடுப்புக்களை அகற்றுவதற்கு முயன்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில் அசாம் ரைபிள்ஸ், மணிப்பூர் போலீசார் பல சுற்றாக கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இதனிடையே ஒய்நாம் பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலையில் அமர்ந்து போலீசார் மற்றும் ராணுவத்தினர் போராட்டம் நடக்கும் பவுகாக்சோ இகாய்க்கு செல்வதை தடுத்தனர்.

இது பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “டெல்லியில் ஜி20 நடக்கிறது. அதே நேரத்தில் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். 4 மாதங்களுக்கு பின்னரும் மணிப்பூரில் வன்முறை நீடிக்கிறது. ஆனால் பிரதமர் மோடியின் இரட்டை என்ஜின் அரசுக்கோ மணிப்பூர் நிலைமை சாதாரணமானதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம்
மணிப்பூரில் மாநிலத்தில் நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அடிப்படை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வானது, “பொருளாதார முற்றுகையை எதிர்கொள்ளும் மக்களுக்கு அடிப்படை பொருட்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்ற அரசு தலைமை செயலாளரின் பிரமாண பத்திரம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.

The post ராணுவ தடுப்புகளை அகற்ற முயற்சி மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் appeared first on Dinakaran.

Related Stories: