தமிழ்செம்மல் விருது பெற விண்ணப்பம்

சிவகங்கை, செப்.6: சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்கள் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்துவதற்காக தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. விருது பெறுபவர்களுக்கு ரூ.25000 ரொக்கப் பரிசு, தகுதியுரையும் வழங்கப்படும். 2023ம் ஆண்டிற்கு தமிழ்ச்செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் ஆர்வலர்கள், விருதுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தன் விவரக்குறிப்பு, நூல்கள், கட்டுரைகள் ஏதேனும் வெளியிடப்பட்டிருப்பின் அவை பற்றிய விவரங்கள்(பட்டியலோடு ஒவ்வொன்றிலும் ஒரு படி இணைக்கப்பட வேண்டும்), தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருப்பின் அதுபற்றிய விவரம், விருதுக்குத் தகுதியாகக் குறிப்பிடத்தக்க பணிகள், தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரைக்கடிதம், மாவட்டத்தில் செயற்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் இரண்டு புகைப்படம், ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்கானச் சான்றுகளையும் இணைத்து சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 10.10.2023க்குள் கிடைக்கும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04575-241487 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9952280798 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்செம்மல் விருது பெற விண்ணப்பம் appeared first on Dinakaran.

Related Stories: