ஜி 20 அழைப்பிதழில் ‘பாரத் ஜனாதிபதி’ என்று குறிப்பிட்டதால் சர்ச்சை இந்தியாவை ‘பாரதம்’ என மாற்ற திட்டமா?: மசோதா கொண்டு வர முடிவு என்ற தகவலால் பரபரப்பு

புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஜி20 மாநாட்டு விருந்து அழைப்பிதழில், ‘இந்திய ஜனாதிபதி’ என்பதற்கு பதிலாக ‘பாரத் ஜனாதிபதி’ என அச்சிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் நாட்டின் பெயரையே மாற்ற ஒன்றிய பாஜ அரசு திட்டமிட்டுள்ளதா என எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பி உள்ளன. மேலும், இந்தியாவை பாரத நாடு என பெயர் மாற்றம் செய்ய, வரும் 18ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் அரசியலமைப்பு திருத்த மசோதா கொண்டு வரப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

ஜி20 அமைப்பிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. முதல் முறையாக இந்தியா தலைமையில் ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்கள் டெல்லி வருகின்றனர். இதற்கான தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜி20 மாநாட்டிற்கு வரும் உலக தலைவர்களுக்கு வரும் 9ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பாக இரவு விருந்து வழங்கப்பட உள்ளது.

இதற்கான அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த அழைப்பிதழில் ‘பிரசிடென்ட் ஆப் இந்தியா’ (இந்தியாவின் ஜனாதிபதி) என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ‘பிரசிடென்ட் ஆப் பாரத்’ (பாரதத்தின் ஜனாதிபதி) என அச்சிடப்பட்டுள்ளது. எனவே, இந்தியா என்ற நாட்டின் பெயரை ‘பாரதம்’ என மாற்ற ஒன்றிய பாஜ அரசு திட்டமிட்டுள்ளதா என நாடு முழுவதும் பெரும் விவாதம் பற்றி எரியத் தொடங்கி உள்ளது.

அதற்கு ஏற்றார் போல், ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிரிராஜ் சிங் ஆகியோர் இந்த அழைப்பிதழை தங்களின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘பாரத் மாதா கி ஜே’ என பதிவிட்டுள்ளனர். அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா உள்ளிட்ட பாஜ முதல்வர்கள் தங்களின் டிவிட்டர் பதிவுகளில் இந்தியாவுக்கு பதிலாக பாரதம் என்ற பெயரை பயன்படுத்தினர். தேசிய ஆசிரியர் தினத்தையொட்டி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாழ்த்து தெரிவித்த ஆளுநர்கள் பலரும் ‘இந்தியா’ என்கிற வார்த்தையை தவிர்த்து, ‘பாரதம்’ என்றே தேசத்தை குறிப்பிட்டு பேசினர்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இளம் மனங்களின் திறனையும் குணநலன்களையும் வடிவமைத்து வலிமை மற்றும் திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்’ என கூறி உள்ளார். இத்தகைய திடீர் மாற்றங்கள் அனைவர் மத்தியிலும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ எனும் கூட்டணியை உருவாக்கி உள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணிக்கு இந்தியா என பெயரிட்டதில் இருந்தே பாஜ தலைவர்கள் பலரும் இந்தியா என்ற பெயரை தவிர்த்து, ‘பாரதம்’ என்பதை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மக்கள் அனைவரும் இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம் என அழைக்க வேண்டுமென வலியுறுத்தினார். மேலும் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத் தொடரில் பேசிய பாஜ மாநிலங்களவை எம்பி நரேஷ் பன்சால், அரசியலமைப்பில் இருந்தே இந்தியா என்கிற பெயரை நீக்க வேண்டுமென பேசினார். காலனித்துவ மனப்பான்மையை அழிக்கும் வகையில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம் என நாட்டின் பெயரை மாற்ற அரசியலமைப்பில் திருத்தம் செய்யவும் பாஜ எம்பி ஹர்நாத் சிங் யாதவ் வலியுறுத்தினார்.
இப்படிப்பட்ட சூழலில், உலக நாடுகளுக்கு ‘பாரதம்’ என்கிற பெயரை அறிமுகம் செய்யும் வகையில் ஜனாதிபதியின் ஜி20 மாநாட்டு அழைப்பிதழில் ‘பாரத ஜனாதிபதி’ என மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அமிர்த காலத்தின் ஆரம்பத்தை குறிக்கும் அடையாளமாக ‘பாரதம்’ என்ற பெயர் மாற்றம் செய்யப்படுவதாக சில பாஜ தலைவர்கள் கருத்து தெரவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நாட்டின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட நாட்டின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளன. ஆனால் இதுதொடர்பாக அரசு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமிதாப், சேவக் வரவேற்பு
நடிகர் அமிதாப் பச்சன் தனது டிவிட்டரில், ‘பாரத் மாதா கி ஜே’ என பதிவிட்டு மூவர்ண இமோஜியை பகிர்ந்துள்ளார். சேவக் தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட பெயர். எங்களின் அசல் பெயர் ‘பாரதம்’. அதை திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலமாகி விட்டது. அடுத்து நடக்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நமது அணி வீரர்கள் ‘பாரதம்’ என்ற பெயரை அச்சிட்ட ஜெர்சி அணிந்து விளையாடுவதை உறுதி செய்ய வேண்டுமென பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை கேட்டுக் கொள்கிறேன்’’ என கூறி உள்ளார்.

அதிமுக பெயர் மாறுமா?
பாஜ கூட்டணியில் உள்ள அதிமுகவின் பெயர் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். நாட்டின் பெயர் மாற்றப்பட்டால் அது அகில பாரத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா கூட்டணியின் பெயரை பாரத் என்று மாற்றினால்…
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், “இந்தியா கூட்டணி தன் பெயரை பாரத் என்று மாற்றி விட்டால் பாஜ என்ன செய்யும்? பாஜவின் இந்த நடவடிக்கை தேசத்துரோகம்” என ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

ஹிட்லர்-துக்ளக் கலவை மோடி
சிபிஐ (எம்எல்) விடுதலைக் கட்சியின் பொதுச் செயலாளர் திபன்கர் பட்டாச்சார்யா கூறுகையில், ‘‘பிரதமர் மோடி ஹிட்லரும், துக்ளக்கும் கலந்த கலவையாக இருக்கிறார். இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்கிறார். ஆனால் அவரது ஆட்சி எதேச்சதிகாரத்தின் ஆய்வகமாக உள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் பலம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதைப் பார்த்து பாஜ பதறுவது, ஜி20 அழைப்பிதழில் பிரதிபலிக்கிறது’’ என்றார்.

இந்தியா கூட்டணியை பார்த்து மோடிக்கு பயம்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 1ல், பாரதம், அது இந்தியா, மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது மாநிலங்களின் ஒன்றியம் கூட தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பிரதமர் மோடி உண்மையான பிரச்னைகளை திசை திருப்புவதற்காக இத்தகைய செயல்களை செய்து வருகிறார். பிரதமர் மோடி அவர்கள் தொடர்ந்து வரலாற்றை திரித்து இந்தியாவை பிரிக்கலாம். பாரதம், மாநிலங்களின் ஒன்றியம் என மாற்றலாம். ஆனால் இறுதியில் வெல்லப் போது பாரதத்தை ஒருங்கிணைக்கும் இந்தியா கூட்டணிதான்’’ என்றார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது டிவிட்டரில் , ‘‘பாஜ மக்களை பிளவுபடுத்த நினைக்கிறது. அவர்கள் இந்தியா கூட்டணியை பார்த்து பயப்படுகிறார்கள்’’ என்றார். மாநிலங்களவை காங்கிரஸ் துணை தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், ‘‘இந்தியா என்ற வார்த்தையை பாஜ வெறுக்க ஆரம்பித்துவிட்டது. அவர்கள் அரசியலமைப்பின் படி செயல்பட வேண்டும்’’ என்றார்.

ரூபாய் நோட்டு செல்லாதா?
மீண்டும் வரிசையில் நிற்கணுமா?
இந்தியாவில் தற்போது ரூ.34.48 லட்சம் கோடி மதிப்புள்ள 13,053 கோடி ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50, ரூ.10, ரூ.5 கரன்சி நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த கரன்சி நோட்டுக்களில் எல்லாம் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்று அச்சிடப்பட்டிருக்கும். அத்தோடு, புழக்கத்தில் உள்ள ரூ.1, ரூ.2, ரூ.10, ரூ.20 நாணயங்களிலும் இந்தியா என்று பொறிக்கப்பட்டிருக்கும். நாட்டின் பெயர் பாரதம் என்று மாற்றப்பட்டால் இந்த ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள் செல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது. ஏற்கனவே ரூ.500, ரூ.1000 செல்லாது என்று கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி திடீரென வெளியிட்ட அறிவிப்பால் ஏற்பட்ட நிலைமை பொதுமக்கள் கண் முன் நிழலாடுகிறது. பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்ற கால்கடுக்க காத்திருந்து உயிரை பறிகொடுத்தவர்கள் பல்லாயிரம் பேர். வேலைக்கு கூட செல்லாமல் இப்படி வங்கி வாசலில் வரிசையில் காத்திருந்தது யாருக்கும் இன்னமும் மறக்கவில்லை. பாரத் என்று நாட்டின் பெயர் மாற்றப்பட்டால், இப்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, மறுபடியும் லைன்ல நிக்க வச்சிருவாங்களோ என்ற பீதியில் இந்திய மக்கள் உறைந்துள்ளனர்.

இவ்வளவையும் மாற்ற வேண்டும்
இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்றினால், ரூபாய் நோட்டுகளை மட்டுமல்ல, ‘கவர்மென்ட் ஆப் இந்தியா’ என குறிப்பிடப்பட்ட அனைத்து ஆவணங்களிலும் பாரதம் என மாற்ற வேண்டும்.

*பாஸ்போர்ட்,
* ஆதார் அட்டை
* வாக்காளர் அடையாள அட்டை,
* பான் கார்டு என அனைத்திலும் ‘கவர்மென்ட் ஆப் பாரத்’ என மாற்ற வேண்டும். இதையெல்லாம் மாற்ற ஒவ்வொன்றுக்கும் மக்கள்தான் அலைய வேண்டியிருக்கும்.

இந்தியா பெயரை மாற்ற திடீர் அவசியம் என்ன?
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசுகையில், ‘‘ஜி20 அழைப்பிதழைத் தொடர்ந்து, இந்தியா எனும் நாட்டின் பெயர் மாற்றப்பட இருப்பதாக தகவல் ஒன்றை கேள்விப்பட்டேன். நாம் நம் நாட்டை பாரதம் என்றும் அழைக்கிறோம். இதில் என்ன புதிதாக இருக்கிறது? ஆங்கிலத்தில் இந்தியா என்கிறோம். இந்த உலகம் நம்மை இந்தியாவாக அறிகிறது. அந்த பெயரை மாற்ற வேண்டிய திடீர் அவசியம் என்ன வந்துவிட்டது? நாட்டில் வரலாறு திருத்தப்படுகிறது’’ என்றார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில், ‘‘நாட்டுடன் தொடர்புடைய இந்தியா கூட்டணி பெயரைப் பார்த்து ஆளும் கட்சி இவ்வளவு ஏன் பயப்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை. அதே சமயம் நாட்டின் பெயரை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை’’ என்றார். காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சி தலைவருமான மெகபூபா முப்தி தனது டிவிட்டரில், ‘‘வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அடிப்படை கோட்பாட்டின் மீதான பாஜவின் வெறுப்பு இன்னும் தரம் தாழ்ந்துள்ளது. பாரதம் என நாட்டின் பெயரை மாற்றுவது அதன் அற்பத்தனத்தையும் சகிப்பின்மையையும் காட்டுகிறது’’ என்றார்.

The post ஜி 20 அழைப்பிதழில் ‘பாரத் ஜனாதிபதி’ என்று குறிப்பிட்டதால் சர்ச்சை இந்தியாவை ‘பாரதம்’ என மாற்ற திட்டமா?: மசோதா கொண்டு வர முடிவு என்ற தகவலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: