மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் பெண் குழந்தை பிறந்தால் விழா எடுத்து கொண்டாடும் தன்னார்வ அமைப்பினர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். தமிழ்நாட்டில் பெண் சிசு கொலை குறித்து பேசிய கருத்தம்மா திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. பெண் குழந்தைகளை பிறந்த உடனேயே கொல்லும் கொடூர வழக்கம் தடுத்து நிறுத்தப்பட்டு இருந்தாலும் இந்தியாவின் எங்கோ ஒரு மூளை முடுக்குகளில் அது இன்னும் அரங்கேறி வருகிறது என்பதே கசப்பான உண்மை.
பெண் சிசு கொலைக்கு எதிரான விழிப்புணர்வு மட்டுமின்றி பாலின பாகுபாட்டிற்கு எதிராகவும் குரல் கொடுக்கும் நிலையில் நூதன முயற்சியில் இறங்கி உள்ளது ராக்புரா தன்னார்வ அமைப்பு. யாருக்கு பெண் குழந்தை பிறந்தாலும் அங்கு விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர் அந்த தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள். இதுவரை 140 முறை இதுபோன்ற விழாக்களை அவர்கள் அரங்கேற்றி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக பிந்த் மாவட்டத்தில் மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்று வீடு திரும்பிய தாய்க்கு மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாய் மற்றும் சேயை மாலை மரியாதையோடு வரவேற்று குழந்தையின் எடைக்கு எடை இனிப்பு மற்றும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன. பெண் குழந்தை பிறந்தால் நாம் பெருமைப்பட வேண்டும் என கூறிய அப்பகுதி மக்கள் இதுபோன்ற விழாக்கள் பெண் குழந்தை பிறப்பை கொண்டாடட்டமாகவும் மாற்றி விட்டதாகவும் தன்னார்வ அமைப்பினருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
The post பெண் குழந்தை பிறந்தால் விழா எடுத்து கொண்டாடும் தன்னார்வ அமைப்பு: பெண் சிசுக் கொலை, பாலின பாகுபாட்டை களைய விழிப்புணர்வு appeared first on Dinakaran.
