கொரோனா பேரிடர் காலத்தில் சேவையாற்றிய அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு

நெல்லை,செப்.5: கொரோனா பேரிடர் காலத்தில் சேவையாற்றி பின்னர் நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என எம்ஆர்பி கோவிட் செவிலியர் சங்கத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுதொடர்பாக எம்ஆர்பி கோவிட் செவிலியர் சங்கத்தினர் சங்கத் தலைவர் விஜயலட்சுமி, செயலாளர் ராஜேஷ் தலைமையில் நெல்லை கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா பேரிடர் காலமான 2020ம் ஆண்டில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் 300 மருத்துவர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். இதில் 3 ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக செவிலியர்களாக இருந்து நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்தப்பட்டனர். இதேபோல் 300 தற்காலிக மருத்துவர்களும் நிரந்தர மருத்துவர்களாக பணியமர்த்தப்பட்டனர்.
மீதமுள்ள 3290 தற்காலிக செவிலியர்கள் காலியாக உள்ள பணியிடங்களில் நிரந்தரப்படுத்தப்பட வேண்டும் என அரசிடம் எங்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் அதை ஏற்காமல் எங்களை பணிநீக்கம் செய்து விட்டனர். அதேசமயம் மாவட்ட சுகாதார சங்கத்தின் சார்பில் எங்களுக்கு தற்காலிக மாற்று பணி வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் அந்த பணியும் எங்களுக்கு வழங்கப்படவில்லை.இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். எங்களுக்கு 6 வாரத்தில் பணிநியமனம் வழங்குமாறு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால் நிரந்தர பணி செய்வதற்கான பணியாணையை உடனடியாக வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post கொரோனா பேரிடர் காலத்தில் சேவையாற்றிய அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: