பொது இடங்களில் புகைபிடிக்க தடை சட்ட விதிகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

தூத்துக்குடி, செப். 2: பொது இடங்களில் புகைபிடிக்க தடைசட்ட விதிகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டுமென அதிகாரிகளை கலெக்டர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் புகையிலை தடை சட்ட அமலாக்கப் பணிகள் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்து பேசியதாவது: தேசிய புகையிலை தடுப்பு சட்ட அமலாக்கப் பணிகளை மாவட்ட அளவில் அமல்படுத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மருத்துவ நிலையங்கள், உணவு விடுதிகள், கல்வி நிலையங்கள், பொது நூலகங்கள், பேருந்து நிலையங்கள், அஞ்சல் அலுவலகங்கள், புகைவண்டி நிலையம், திரையரங்குகள், பணிபுரியும் இடங்கள், தேனீர் கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் அலுவலக பொது இடங்களில் பொதுமக்கள் புகைபிடிக்க தடை செய்யப்பட்டு உள்ளது.

மேலும் 18 வயதிற்குட்பட்ட நபர்களிடம் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டு உள்ளது. புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி மற்றும் 18 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வது இல்லை போன்ற பதாகைகளை சுகாதாரத் துறை அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி தேனீர் கடைகள் உள்ளிட்ட இடங்களில் பதாகைகள் வைக்க வேண்டும்.கல்வி நிறுவனங்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் புகையிலை தடை சட்ட விதிகளை அமல்படுத்தி, புகையிலை இல்லா கல்வி நிறுவனம் என்ற சான்றிதழை, பொது சுகாதாரத் துறை துணை இயக்குநருக்கு விண்ணப்பித்து, சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும், என்றார். கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் (கோவில்பட்டி) ஜெகவீரபாண்டியன் மற்றும் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

The post பொது இடங்களில் புகைபிடிக்க தடை சட்ட விதிகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: