அய்யனார் கோயிலில் புரவி எடுத்து பக்தர்கள் வழிபாடு

சாயல்குடி,செப்.1: கடலாடி அருகே மீனங்குடி அய்யனார், அரியநாச்சி அம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. மீனங்குடி கரைகாத்த அய்யனார் மற்றும் அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் பெண்கள் கும்மியடித்தும் இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும் ஒருவாரம் திருவிழா கொண்டாடி மகிழ்ந்தனர்.

மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டி கிராம மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மண் குதிரை, சாமி உருவங்கள் மற்றும் தவளும் பிள்ளையை ஊர்வலமாக சுமந்து வரும் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. மீனங்குடி கிராமத்தின் சார்பில் நேர்த்திக்கடன் மண் குதிரை மற்றும் தவளும் பிள்ளை, சாமி உருவங்கள் செய்ய பூதங்குடியில் பிடிமண் வழங்கப்பட்டது. அங்கு தயார் செய்யப்பட்ட குதிரைகள், தவளும் பிள்ளைகள் மற்றும் கருப்பசாமி, பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன் உள்ளிட்ட காவல் தெய்வங்கள், காளை, பசு, நாகர்.

நாய் உருவத்தை கிராம மக்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்து மீனங்குடி கிராமத்தில் வைத்து வழிபட்டனர். குதிரை மற்றும் உருவங்கள் முன்பாக கடந்தாண்டு விளைவிக்கப்பட்ட நெல்லை கொட்டி, பூசாரிகளிடமிருந்து விபூதி கலந்த விதை நெல்லை விவசாயிகள் பெற்றுச் சென்றனர். பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்திய பிறகு குதிரை மற்றும் தவளும் பிள்ளை, சாமி உருவங்கள் கிராம எல்லையில் கரைகாத்த அய்யனார் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து வைத்தனர்.

The post அய்யனார் கோயிலில் புரவி எடுத்து பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: