மாவட்டத்தில் 50 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் பாதாளத்திற்கு சென்றது

தர்மபுரி, ஆக.27: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளில் காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பருவமழை பொய்த்ததால், 50 அடியில் கிடைத்த நிலத்தடி நீர்மட்டம், படுபாதாளத்திற்கு சென்றுள்ளதாக கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனால், பூமி வெப்பமயமாதல் அதிகரித்து, காலநிலை மற்றும் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை சமாளிப்பதற்காக நதி நீர் மற்றும் ஏரிகளில் மாசு தடுப்பு, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பெருமளவில் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு காலநிலை மாற்றம் இயக்கத்தை, கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழக மக்களுக்கு நிலையான மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் எதிர்காலத்தை உருவாக்குதல், தமிழகத்தை காலநிலை ஸ்மார்ட் மாநிலமாக மாற்றுதல், நிலையான விவசாயம், காலநிலை மீள்தன்மை, நீர்வளங்கள், வனம் மற்றும் பல்லுயிர், கடலோர பகுதி மேலாண்மை, பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு, சுகாதாரம், தொழில்நுட்பம், ஆற்றல் மாற்றம், உமிழ்வு குறைத்தல் மற்றும் போக்குவரத்து உள்ளிட்டவைகளில் காலநிலை மாற்றம் சீர் செய்யவே காலநிலை மாற்றம் இயக்கத்தை அரசு தொடங்கி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் குழு அமைக்கப்பட்டு, இக்குழுவின் இயக்குனராக கலெக்டர் சாந்தி உள்ளார். காலநிலை மாற்ற அலுவலராக மாவட்ட வன அலுவலர் அப்பல நாயுடு செயல்பட்டு வருகிறார். இக்குழுவில் 8 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வேளாண்மைத்துறை, கால்நடை துறை, தர்மபுரி நகராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், சுற்றுச்சூழல் துறை சார்பில், தமிழ்நாடு காலநிலை மாற்றம் மற்றும் தர்மபுரி மாவட்ட அளவிலான காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம், தமிழகத்தில் முதன்முறையாக நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார்.

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் தலைமை இயக்குநர் தீபக் எஸ்.பில்ஜி, மாவட்ட வன அலுவலர் அப்பல நாயுடு முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில், அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் பழனிவேலு, பூவுலகின் நண்பர்கள் வெற்றிசெல்வன், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் அருண்குமார் ஆகியோர் பேசியதாவது: தமிழ்நாட்டு மக்களுக்கு நிலையான மற்றும் காலநிலையை எதிர்க்கும் எதிர்காலத்தை உருவாக்க, தமிழ்நாட்டை காலநிலை ஸ்மார்ட் மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது தமிழ்நாடு காலநிலை மாற்றம் பணியின் இலக்காகும். விலைமதிப்பற்ற சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதற்கான தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம், பசுமையான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான பசுமைத் தமிழ்நாடு மிஷன், தமிழ்நாடு காலநிலை ஆகிய மூன்று முக்கிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தட்பவெப்ப நிலையைத் தாங்கும் மாநிலமாக, தமிழ்நாட்டை மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டு, செயல்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 207 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நடப்பாண்டு ஜூலையில் 62 மில்லி மீட்டர் தான் மழை பெய்துள்ளது. மாவட்ட நிலத்தடி நீரில் புளோரைடு அதிகமாக படிந்துள்ளது. இதனை பயன்படுத்தினால் பல், எலும்பு உள்ளிட்டவைகள் புளூரோசிஸ் நோயால் பாதிக்கப்படும். தற்போது, ஒகேனக்கல் கூட்டு குடிநீரை பயன்படுத்துவதால், இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டுள்ளனர்.

அதாவது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பயன்படுத்தும் மக்கள் மட்டுமே மீண்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுக்கு முன்பு, தர்மபுரி மாவட்டத்தில் 50 முதல் 200 அடிக்குள் நிலத்தடி நீர் கிடந்தது. தற்போது, ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது. நிலத்தடி நீரை பாதுகாக்க நீர் மேலாண்மை, மண் மேலாண்மை ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இக்கருத்தரங்கில், முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்திற்கு பொறுப்பு அலுவலராக திருமலைவாசன் நியமிக்கப்பட்டதற்கான ஆணையை, கலெக்டர் சாந்தி வழங்கினார்.இதில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் உதவி இயக்குநர் மனிஷ் மீனா, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநிலப்பணி இயக்க உதவி இயக்குநர் திரட்டி பல்லி தருண் குமார், தர்மபுரி ஆர்டிஓ கீதாராணி, அரூர் ஆர்டிஓ வில்சன் ராஜசேகர் உள்ளிட்ட தன்னார்வலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தில் 50 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் பாதாளத்திற்கு சென்றது appeared first on Dinakaran.

Related Stories: