மருத்துவத்துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: அமைச்சர் மனோதங்கராஜ் பெருமிதம்

கன்னியாகுமரி ஆக. 27: கன்னியாகுமரியில் நடந்த 37-வது தென்மண்டல குழந்தைகள் மருத்துவ மாநாட்டில் அமைச்சர் மனோதங்கராஜ் மருத்துவத்துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று கூறினார். இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கம் (தமிழ்நாடு) பிரிவின் 37-வது தென்மண்டல மாநாடு மற்றும் 47-வது மாநில மாநாடு கன்னியாகுமரியில் தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் நடந்தது. மாநாட்டிற்கு இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்க தமிழ்நாடு பிரிவு தலைவர் டாக்டர் சுரேஷ்பாலன் தலைமை வகித்தார். நாகர்கோவில் மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கன்னியாகுமரியை குமரிக்கண்டம் என்றும் லெமூரியா கண்டம் என்றும் கூறுவார்கள்.

உலகின் எந்த பகுதியிலும் கன்னியாகுமரியை பற்றி அறியாதவர்கள் எவரும் இல்லை. கன்னியாகுமரியில் அதிகமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த மாவட்டம் மருத்துவர்கள் நிறைந்த மாவட்டம் மட்டுமல்ல. மருத்துவத் துறையில் சிறந்த மாவட்டமாகவும் திகழ்கிறது. மக்கள் மத்தியில் பல புதியபுதிய நோய்கள் உருவாகி வருகிறது. இது கவலையைத் தருகிறது. நாம் இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும். உணவுப் பழக்கத்தில் உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். குப்பையில்லா குமரி இயக்கத்தை ஆரம்பித்து தற்போது அந்த பணி நடைபெற்று வருகிறது. இந்த பூமியை பாதுகாப்பது நமது கடமை ஆகும். தமிழக முதலமைச்சராக கலைஞர் இருந்தபோது இந்த மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி, ஆயுர்வேத கல்லூரி, சித்த மருத்துவக் கல்லூரி போன்ற மருத்துக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மருத்துவத்துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வட மாநிலங்களில் போதுமான அளவு மருத்துவத்துறை வளர்ச்சி அடையவில்லை. மாவட்டத்தில் ஆரம்பகாலத்தில் பிள்ளை வைத்தியம், கண் வைத்தியம், மாட்டு வைத்தியம் போன்றவைதான் மருத்துவத்துறையின் அடிப்படையாக இருந்துள்ளது. இம்மாவட்டத்தில் வர்மக்கலை மிகவும் பிரபலமாக உள்ளது. கன்னியாகுமரி மருந்துவாழ்மலையில் மருத்துவ மூலிகைகள் பல கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு பல சித்தர்கள் வைத்திய முறையை மேற்கொண்டு வந்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மாநாட்டில் டாக்டர்கள் பசவராஜா, ராஜமூர்த்தி, ஜீசன்உண்ணி, ஜோஸ், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரிஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் டாக்டர்கள் ஜெயசிங்டேவிட், தாணப்பன், கோபால் சுப்பிரமணியன், திரவியம்மோகன், குணசேகரன், கன்னியாகுமரி பேரூராட்சி துணைத்தலைவர் ஜெனஸ்மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மருத்துவத்துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: அமைச்சர் மனோதங்கராஜ் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: