போதையில் தொழிலாளியை அடித்துக் கொன்ற எஸ்ஐ கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே குடிபோதையில் தொழிலாளியை அடித்து கொலை செய்த சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள மையில் பகுதியை சேர்ந்தவர் தினேசன் (53). மையில் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சஜீவன் (55). கூலித் தொழிலாளி. இவர் அடிக்கடி தினேசனின் வீட்டுக்கு மது அருந்துவதற்காக செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவும் வழக்கம்போல தினேசனின் வீட்டுக்கு சஜீவன் சென்றுள்ளார். பின்னர் 2 பேரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர்.

அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சஜீவனை, தினேசன் இரும்புக் கம்பியால் அடித்து இருக்கிறார். அதில் படுகாயம் அடைந்த சஜீவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். இது குறித்து மையில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து சஜீவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் தினேசன் கைது செய்யப்பட்டார்.

The post போதையில் தொழிலாளியை அடித்துக் கொன்ற எஸ்ஐ கைது appeared first on Dinakaran.

Related Stories: