சந்திரயான்-3 திட்டத்துக்கு சாப்ட்வேர் வடிவமைப்பாளராக செயல்பட்ட பழநி விஞ்ஞானி

திண்டுக்கல்: நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையும், நிலவில் கால் பதித்த 4வது நாடு என்ற பெருமையும் சந்திரயான் – 3 திட்டம் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தில் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநர் சங்கரன், திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சந்திரயான் – 3 திட்டத்தில் பூமியிலிருந்து ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படுவதற்கான ஆர்பிட்டர், நிலவில் கால் பதிப்பதற்கான லேண்டர் மற்றும் நிலவினை ஆய்வு செய்யும் ரோவர் ஆகியன மிக முக்கியமானவைகளாகும்.

இவை மூன்றையும் பெங்களூரில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இயக்குவதற்கான ஆணைகளை பிறப்பிக்கும் டெலி கமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக செயல்பட்டவர் திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகேயுள்ள கணக்கன்பட்டியை சேர்ந்த கவுரிமணி (50). சுமார் 23 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) செயற்கைக்கோள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி படிப்புகளை பழநி, திண்டுக்கலில் முடித்தவர், தொலை தொடர்பு பொறியியலில் பிஇ, எம்இ பட்டங்களை மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் முடித்துள்ளார்.  இவரது கணவர் வீ.ராமராஜ், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

The post சந்திரயான்-3 திட்டத்துக்கு சாப்ட்வேர் வடிவமைப்பாளராக செயல்பட்ட பழநி விஞ்ஞானி appeared first on Dinakaran.

Related Stories: